மத்திய அமைச்சரான உடனேயே ‘புரமோஷன்?’: கொலைக் கேஸில் சிக்கும் கட்டாரி

லால்சந்த் கட்டாரியா! ஞாயிற்றுக்கிழமையன்று மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றது முதலே சர்ச்சை...சர்ச்சை!
இலாகாவில் குழப்பம்!
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கட்டாரியாவுக்கு முதலில் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜிதேந்தர்சிங் பன்வாருக்கும் இதே பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பொறுப்பு ஒதுக்கப்பட்டது. இதனால் குழப்பம் நிலவியது. பின்னர் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து முறையிட ஊரக மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
கொலை வழக்கு
இந்நிலையில் உச்சநீதிமன்றம் கடந்த திங்கள்கிழமையன்று கட்டாரியாவுக்கும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசுக்கும் ஒரு நோட்டீஸை அனுப்பியுள்ளது. கட்டாரியா மீது நிலுவையில் இருக்கும் கொலை வழக்கை ஏன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கூடாது என்று விளக்கம் கேட்டு இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
வழக்கின் பின்னணி
கடந்த ஆண்டு ஜூன் 5-ந் தேதி ஜெய்ப்பூரில் உள்ள தனியார் கல்லூரி உரிமையாளரான பன்சிதார் ஜாட் என்பவரைக் கொலை செய்ததில் கட்டாரியாவுக்கு தொடர்பிருக்கிறது என்று குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் கட்டாரியா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதe நிலையில் பன்சிதாரின் மகன் ராஜேந்திர பிரசாத் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். தமது தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
நோட்டீஸ்
இவ்வழக்கை நீதிபதிகள் ஸ்வட்னர் குமார் மற்றும் முகோபாத்யா ஆகியோர் திங்கள்கிழமையன்று விசாரித்தனர். பின்னர் பன்சிதார் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக் கூடாது என்று விளக்கம் அளிக்குமாறு கட்டாரியாவுக்கும் ராஜஸ்தான் மாநில அரசுக்கும் நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர்.
அமைச்சர் பதவியேற்றவுடன் யோகம் அடிக்கும் என்று நம்பினால் கெரகம் வருதே என்று புலம்புகிறாராம் கட்டாரியா!












Click it and Unblock the Notifications