ஆர்ப்பாட்டமாக வந்து அமைதியாக திரும்பிப் போன நிலம்
சென்னை: அப்பாடா.. தப்பிச்சோம்டா சாமி... இதுதான் சென்னைவாசிகள் பலரும் நிலம் புயல் மகாபலிபுரம் அருகே கரையைக் கடந்தபோது வெளிப்படுத்திய யூனிபார்ம் வார்த்தை. அந்த அளவுக்கு நிலம் புயல் சென்னை மக்களை பெரும் பீதிக்குள்ளாக்கி விட்டது.

தானே மாதிரி ஆயிருமோ...?
நிலம் புயல் சென்னையை நெருங்க நெருங்க பலருக்கும் பீதி. காரணம். புயல் வரும்போது கூடவே கன மழையும் பெய்யும். ஆனால் சென்னையில் மழை நின்று பலத்த காற்றுதான் வீசியது. இதனால் தானே புயல் மாதிரியான பாதிப்பை சந்திப்போமோ என்று பலரும் பயந்தனர்.

கடைக்கார் மெழுகுவர்த்தி இல்லையா...?
புயல் நெருங்க நெருங்க சென்னையில் பகலிலேயே இருள் சூழ்ந்தது. காரணம், மின்வாரியத்தினர் முன்னெச்சரிக்கையாக மின்சாரத்தை நிறுத்தி விட்டதால். இதனால் புயல் நெருங்கிய 31ம் தேதி காலை முதல் சென்னையில் எங்குமே கரண்ட் இல்லை. இதனால் பலரும் பெட்டிக் கடை, மளிகைக் கடைகளை முற்றுகையிட்டு மெழுகுவர்த்திகளை வாங்க அலை மோதினர்.

படபடப்போடு ஒரு காத்திருப்பு!
கடற்கரைப் பக்கம் போகாதீங்க என்று காவல்துறையினர் காட்டுக் கத்து கத்தியும் கூட அதைப் பொருட்படுத்தாமல் புயலைப் பார்க்கப் போகிறோம், போட்டோ புடிக்கப் போகிறோம் என்று பலரும் மெரீனா, பெசன்ட் நகர் என்று கடற்கரைக்குப் படையெடுத்தனர். அவர்களை அடிக்காத குறையாக விரட்ட வேண்டியதாயிற்று போலீஸாருக்கு.

மாமா, எங்க ஊருக்கு வந்த புயல் போயிருச்சா மாமா?
சென்னையில் சுத்தமாக மின்சாரம் போனதால், புயல் எங்கே இருக்கிறது என்பது தெரியாமல் பலரும் தவித்துப் போயினர். இதனால் மதுரைக்கும், மானாமதுரைக்கும், கோயம்பத்துரூக்கும், திருப்பூருக்கும் போனைப் போட்டு எங்க ஊருக்கு வந்த புயல் எங்க இருக்கு மாமா, அண்ணா, அப்பா என்று பலரும் கேட்டதைக் காண முடிந்தது.

வெறும் காத்து மட்டும்தாங்க வந்துச்சு...!
நிலம் புயலால் சென்னைக்குக் கிடைத்த பெரிய பலன் பலத்த சூறாவளிக் காற்றுதான். இப்படி ஒரு காற்றை இப்போதைய இளம் தலைமுறையினர் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி ஒரு பேய்க்காற்று. பலரும் அதை வெளியில் வந்து அனுபவித்தனர். ஆனால் மழை வராமல் போனது பலரையும் ஏமாற்றியது.

நிம்மதிப் பெருமூச்சு விட்ட கடலூர்
தானே புயல் வந்தபோது கடலூர் மாவட்டம் கடும் பாதிப்பை சந்தித்தது. ஆனால் நிலம் புயலால் அந்தஅளவுக்குப் பாதிப்பு இல்லை. ஆனால் கன மழை வெளுத்து வாங்கி விட்டது. இதனால் பல வயல்கள் நீரில் மூழ்கிப் போயின. பெரும் நஷ்டம் என்று கூற முடியாவிட்டாலும் கூட, நஷ்டம்தான் கடலூருக்கு.

நாகையில்தான் பெரும் நஷ்டம்
நாகை மாவட்ட விவசாயிகள்தான் இந்த நிலம் புயலால் பெரும் பாதிப்பை சந்தித்தனர். பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள், சம்பா பயிர்கள் தொடர் மழையால் நீரில் மூழ்கிப் போய் விட்டன.

அது சரி, நிலமா, நீலமா...?
இதையெல்லாம் விட பெரிய குழப்பம் புயலுக்கு வைக்கப்பட்ட பெயர்தான். எஸ்.ஆர். ரமணனே படு தெளிவாக நிலம் புயல் என்று பலமுறை சொல்லியும் கூட, ஆங்கிலத்திலும் தெளிவான ஸ்பெல்லிங் இருந்தும் கூட பல மீடியாக்கள் நீலம், அகலம், சதுரம் என்று புயலின் பெயரை பிரித்து மேய்ந்து விட்டனர். தட்ஸ்தமிழ்தான் தொடக்கத்திலிருந்தே நிலம் என்று அழகாக சொல்லி வந்தது...

அடுத்து வருது மகாசேன்!
நிலம் புயல் போய் விட்டது. அப்பாடா என்று மக்கள் இப்போதைக்கு நி்ம்மதியாகியுள்ளனர். இனி அடுத்து ஏதாவது புயல் வந்தால் அதற்குப் பெயர் மகாசேன் என்று வைத்துள்ளனர். இந்தப் பெயரை வைத்த நாடு இலங்கை.
இலங்கை புயலாச்சே...என்னென்ன சேட்டை செய்யுமோ.. வரட்டும், பார்த்துரலாம் அதையும்.












Click it and Unblock the Notifications