மாடியில் இருந்து குதித்து சென்னை சிடிஎஸ் பெண் ஊழியர் தற்கொலை: கணவர் கைது
சென்னை: தாம்பரத்தில் உள்ள சி.டி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றிய பெண் என்ஜினியர் தனது அலுவலகக் கட்டிடத்தின் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது காதல் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் பிடாரி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரூபாவதி. திருவாரூர் தலைமை தபால் நிலையத்தில் பணியாற்றுகிறார். அவரது மகள் நளினி (26). பி.இ. பட்டதாரி. அவர் கல்லூரியில் படித்தபோது தன்னுடன் படித்த புழுதிவாக்கத்தைச் சேர்ந்த ராம்குமார்(27) என்பவரை காதலித்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்திருந்தாலும் அவர்கள் காதலை பெற்றோர் ஏற்றுக் கொண்டு 10.7.2011 அன்று அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
மகளின் திருமணத்திற்கு ரூபாவதி ரூ. 10 லட்சம் செலவழித்ததாகக் கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு நளினி புழுதிவாக்கம் ராம்நகரில் உள்ள தனது கணவரின் வீட்டில் அவரது குடும்பத்தினருடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்தார். ராம்குமார் தி. நகரில் உள்ள பைலட் பயிற்சி மையத்திலும், நளினி தாம்பரத்தில் உள்ள சி.டி.எஸ். நிறுவனத்திலும் வேலை பார்த்தனர்.
காதல் திருமணம் என்றாலும் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விடுப்பு கேட்க நளினி தனது கணவரை அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் தன்னுடைய அலுவலகத்திற்கு சென்றார். அப்போது தனது அலுவலக கட்டிடத்தின் 6வது மாடிக்கு சென்ற நளினி அங்கிருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.
இது குறித்து ரூபாவதி தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது,
எனது மகளை ரூ. 10 லட்சம் செலவு செய்து திருமணம் செய்து கொடுத்தேன். ஆனால் ராம்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.7 லட்சம் வரதட்சணை கேட்டு எனது மகளை கொடுமைப்படுத்தினர். மேலும், ராம்குமார் வேலைக்கு செல்லாமல் எனது மகளின் சம்பள பணத்தை எடுத்து குடித்து ஊதாரித்தனமாக செலவு செய்து வந்தார். எனது மகளின் செலவிற்கு நான் பணம் கொடுத்து வந்தேன். தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக எனது மகள் செல்போனில் கூறினாள். அவளின் சாவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 15 மாதங்களே ஆன நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் இது குறித்து உதவி கலெக்டர் எட்டியப்பன் விசாரணை நடத்தி வருகிறார். ஆர்.டி.ஓ. விசாரணையின்போது ரூபாவதி கூறுகையில்,
எனது மகள் சாவுக்கு அவளின் கணவர் ராம்குமார் தான் காரணம். அவர் கொடுமையால் தான் இறந்துவிட்டாள். தீபாவளிக்கு மகளை எனது வீட்டுக்கு அழைத்துச் செல்லவிருந்தேன். அதற்கு லீவு கேட்க போனபோது இப்படி இறந்துவிட்டாளே என்றார்.
இதையடுத்து மனைவியை தற்கொலை செய்யத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு ராம்குமார் கைது செய்யப்பட்டார். தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications