காங்கிரஸுக்கு எதிரான மனு விசாரிக்காமலேயே தள்ளுபடி-தேர்தல் ஆணையம் மீது சு.சாமி புகார்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரிய தனது மனு தேர்தல் ஆணையத்தால் விசாரிக்கப்படாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்திற்கு செல்வதாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு நாளிதழுக்கு காங்கிரஸ் வட்டியில்லாமல் ரூ.90 கடன் கொடுத்த விவகாரத்தில் அக்கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தார். ஆனால் தேர்தல் ஆணையம் அவரது மனுவை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நிராகரித்துவிட்டது.
இதையடுத்து அவர் தேர்தல் ஆணையத்திற்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
உங்கள் முன்பு நான் வைத்த கோரிக்கையில் எந்த விசாரணையும் நடத்தாமல் நீங்கள் கைகழுவிவிட்டீர்கள். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 29 ஏ முதல் சி வரையிலான பிரிவுகளின்படி காங்கிரஸின் அங்கீகாரத்தை ரத்து செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தீர்கள்.
இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்கும் முன் விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். சட்டக் கண்ணோட்டத்தின்படி எனது கருத்தைத் தெரிவிக்கவும் நீங்கள் வாய்ப்பு தரவில்லை. தேர்தல் ஆணையம் என்பது ஒரு தீர்ப்பாயம் போல் நீதி வழங்குவது மட்டுமின்றி, நீதி வழங்கப்பட்டது என்பதைக் காட்டவும் வேண்டும்.
மேலும், எனது மனு தொடர்பாக நீங்கள் எடுக்க உள்ள நிலைப்பாட்டை முன்கூட்டியே ஊடகங்களிடம் கசிய விட்டீர்கள். இதனால் மக்களிடையே தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. எனவே இந்த விவகாரத்தை நான் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல உள்ளேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications