இலங்கையில் விடுதலைப் புலிகள் பராமரித்த சிறுவர் இல்லங்களில் சிறப்பான தீபாவளிக் கொண்டாட்டம்
கொழும்பு: இலங்கைப் போரில் மிகக் கோரமாக பாதிக்கப்பட்ட முல்லைத் தீவு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பராமரித்து வந்த 'அன்பு' மற்றும் 'பாரதி' இல்லங்களில் நேற்று வெகு சிறப்பாக தீபாவளி கொண்டாடப்பட்டது.
விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கே.பி. எனப்படும் குமரன் பத்மநாபன் தலைமையில் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்புக் கழகம் என்ற நெர்டோ அமைப்பு செயல்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் பராமரித்து வந்த 'அன்பு' மற்றும் 'பாரதி' இல்லங்களை தற்போது நெர்டோ அமைப்பின் கீழ் கே.பி. பராமரித்து வருகிறார்.

முல்லைத்தீவு மாவட்டம் முத்துவிநாயகர்புரத்தில் உள்ள முத்தையன்கட்டில் 'அன்பு' இல்லமும், முள்ளியவளையில் 'பாரதி' இல்லமும் அமைந்துள்ளன. இந்த இரண்டு இல்லங்களிலும் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. தீபாவளி கொண்டாட்டத்தில் கே.பி. கலந்து கொண்டு புலம்பெயர் தமிழர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் வழங்கிய அன்பளிப்புகளை சிறுவர்களுக்கு வழங்கினார்.
சிறுவர், சிறுமியர் புத்தாடைகள் உடுத்தி பட்டாசுகளை வெடித்து தீபாவளியைக் கொண்டாடினர். இலங்கை அரசு கே.பி.யை அண்மையில் சுதந்திரமாக இயங்க அனுமதித்த பின்பு அவர் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications