சிலிண்டர் வழங்கும் கேஸ் ஏஜென்சியை மாற்றிக் கொள்ளும் வசதி விரைவில் அறிமுகம்!

செல்போன் எண்களை மாற்றாமல் சேவை வழங்கும் நிறுவனத்தை மட்டும் மாற்றும் வசதியைப் போல, சமையல் கேஸ் வழங்கும் எண்ணெய் நிறுவனத்தை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதியை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.
வீடுகளுக்கு வழங்கப்படும் கேஸ் சிலிண்டர்களுக்கான மானியத்தில் பாதியை மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் வருடத்துக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையிலும் மற்றவை சந்தை விலையிலும் வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்த 6 மானிய சிலிண்டர்களை வழங்குவதில் கூட கேஸ் ஏஜென்சிகள் தில்லுமுல்லு செய்து வருகின்றன. முதலில் மக்கள் எத்தனை சிலிண்டர்களை வேண்டுமானாலும் மானிய விலையில் வாங்கலாம் என்ற நிலை இருந்ததால், மக்களுக்கு தர வேண்டிய சிலிண்டர்களை ஹோட்டல்களுக்கு அதிக விலைக்கு விற்று காசு பார்த்து வந்தன பல ஏஜென்சிகளும், அதை டெலிவர் செய்யும் ஆட்களும்.
ஆனால், இப்போது 6 மட்டுமே என்ற நிலை வந்துவிட்டதால் இவர்களது சைடு வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வீடுகளுக்கு தர வேண்டிய 6 மானிய விலை சிலிண்டர்களைக் கூட ஒழுங்காக சப்ளை செய்யாமல், ஏதாவது காரணத்தைக் கூறி காலம் தாழ்த்தி வருகின்றனர்.
நிலைமை இப்படியே போனால் அடுத்த தேர்தலில் காங்கிரசுக்கு சிங்கிள் டிஜிட் கூட சீட்கள் கிடைக்காது என்று சமீபத்தில் நடந்த உயர் மட்டக் கூட்டத்தில் பல எம்பிக்களும் அமைச்சர்களும் புலம்பினர்.
இதையடுத்து தவறு செய்யும் ஏஜென்சிகளுக்கு ஆப்பு வைக்கும் வகையில், மக்கள் விரும்பினால் எந்த ஏஜென்சிக்கும் தங்களது இணைப்பை மாற்றிக் கொள்ளும் வசதியை மத்திய அரசு அமலாக்கத் திட்டமிட்டுள்ளது.
இப்போதுள்ள விதிகளின்படி வீடு மாறினால் மட்டுமே ஏஜென்சி மாறும் என்ற நிலை உள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பாரத் கேஸ் வாங்கினால், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இன்டேனுக்கு மாறுவது என்பது சாத்தியமே இல்லாத விஷயமாக உள்ளது. மத்திய அரசின் புதிய திட்டத்தால் இது இனி சாத்தியமாகலாம்.
(ஆனால், அந்த ஏஜென்சியும் வாட்டி வதைத்தால் என்ன செய்வது?)
அதே போல KYC (know your customer) எனப்படும் ஆவணங்களை, அதாவது வீட்டு முகவரி ஆதாரம், புகைப்பட ஆதாரம் ஆகியவற்றைத் தராவிட்டால் நவம்பர் 15 முதல் கேஸ் சப்ளை செய்யப்படாது என்ற அறிவிப்பையும் மத்திய அரசு தளர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த ஆதாரங்களை மக்கள் தாக்கல் செய்யாவிட்டாலும் அவர்களுக்கு சிலிண்டரைத் தர வேண்டும், அதற்கு சந்தை விலையை வசூலிக்கலாம் என்று ஏஜென்சிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஒரு வீட்டுக்கு ஒரு கேஸ் சிலிண்டர் இணைப்பு தான் என்ற திட்டத்தையும் மத்திய அரசு விலக்க உள்ளது. ஒரே வீட்டுக்கு எத்தனை கேஸ் சிலிண்டர்களுக்கு வேண்டுமானாலும் இணைப்புப் பெறலாம். ஆனால், ஒரு சிலிண்டருக்கு மட்டுமே மத்திய அரசின் மானியம் தரப்படுமாம். இதுவும் நல்ல விஷயம் தான்.
அதே போல ஆதார் அடையாள அட்டைகள் மக்களுக்குத் தரப்பட்ட பிறகு, கேஸ் சிலிண்டர்களுக்கான மானியத்தை அவர்களுக்கு பணமாகவே தந்துவிடலாம் என்ற யோசனையை பிரதமர் மன்மோகன் சிங் முன் வைத்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications