அஜ்மல் கசாப்: 26/11/08 தொடங்கி 21/11/12 வரை....
மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற நாளான 26/11/08 இந்திய வரலாற்றில் முக்கிய நாளாக இடம்பெற்றுவிட்டது. பாகிஸ்தானில் இருந்து கடல் மார்க்கமாக வந்த தீவிரவாதிகள் மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாத தாக்குதலை நடத்தி பல அப்பாவிகளை கொலை செய்தனர். தாஜ்ஹோட்டலை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தீவிரவாதிகள் அங்கிருந்த விருந்தினர்களையும் பிணைக் கைதிகளாக்கினர்.
பல உயிர்களை தியாகம் செய்து மூன்றுநாட்கள் தீவிரவாதிகளின் கையில் இருந்த தாஜ் ஹோட்டலையும் அங்கு தங்கியிருந்த விருந்தினர்களையும் பாதுகாத்து ஒரே ஒரு தீவிரவாதியை உயிரோடு பிடித்தனர் மும்பை போலீசார். அஜ்மல் கசாப் என்ற அந்த தீவிரவாதிக்கு தற்போது தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக அஜ்மல் கசாப் மும்பை சிறையில் பலகோடி செலவு செய்து பலத்த பாதுகாப்பில் இருந்துள்ளான். அவனைப் பற்றி சில தகவல்கள்

166 பேரை கொலை செய்த 10 தீவிரவாதிகள்
மும்பையில் மூன்றுநாட்கள் தீவிரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளில் 9பேர் கொல்லப்பட்டனர் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். அவனுடைய முழு பெயர் முகம்மது அஜ்மல் அமீர் கசாப்.

அஜ்மல் கசாப்புக்கு சிறை
மும்பையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முகம்மது அஜ்மல் அமீர் கசாப் என்ற தீவிரவாதியை பாகிஸ்தானியரே அல்ல என்று அந்நாட்டு அரசு மறுத்தது. பின்னர் ஜனவரி 2009ல் தங்கள் நாட்டு குடிமகன்தான் என்று பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.

அஜ்மல் கசாப்பிற்கு வக்கீல்கள் வாதட மறுப்பு
அஜ்மல்காசப்பிற்கு ஆதரவாக எந்த வழக்கறிஞரும் மறுத்துவிட்டனர். தொழிலே போனாலும் பரவாயில்லை பயங்கரவாதிக்கு ஆதரவாக ஆஜராக முடியாது என்று நீதிபதிகளின் முன்பு வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ராஜு ராமச்சந்திரன், கெளரவ் அகர்வால் இரண்டு வக்கீல்களை கசாப்பிற்காக ஆஜராக ஏற்பாடு செய்யப்பட்டது.

உயிரிழந்தவர்களுக்கு வக்கீல்கள் பீஸ்
கசாப்புக்காக ஆஜரான ராஜு ராமச்சந்திரன், கெளரவ் அகர்வால் ஆகிய இருவரும் கசாப்புக்காக ஆஜராகியதற்காக தங்களுக்குத் தரப்பட்ட வக்கீல் பீஸை அப்படியே மும்பை தீவிரவாதத் தாக்குதலின்போது தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடி உயிர் நீத்த மும்பை போலீஸாரின் குடும்பத்தினருக்கு வழங்கினர். அவர்கள் இருவருக்கும் வக்கீல் கட்டணமாக ரூ. 14.5 லட்சம் கிடைத்தது.

2010ல் கசாப்புக்கு தூக்கு
கசாப் மீது 11000 பக்கங்கள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது கசாப் மீதான 86 குற்றச்சாட்டுகளில் 4 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவனுக்கு தூக்கு தண்டனையும், 5 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆயுள் தண்டனையும் விதித்து 2010ம் ஆண்டு மே 6ம் தேதி தனி கோர்ட் நீதிபதி தஹ்லியானி தீர்ப்பளித்தார். இதனை மும்பை உயர்நீதிமன்றம் 2011ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி உறுதி செய்தது. 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி உச்சநீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.

மாதம் 2 கோடி செலவு
தீவிரவாதிகளால் கசாப்பின் உயிருக்கு ஆபத்து நேரிட்டு விடக் கூடாது என்பதற்காக கசாப்பை பலத்த பாதுகாப்புடன் மும்பை ஆர்தர் சாலை சிறைச்சாலையில் அடைத்து வைத்திருந்தனர். இங்கு அஜ்மல் கசாப்பின் பாதுகாப்புக்காக மாதந்தோறும் ரூ. 2 கோடி செலவிடப்பட்டதாம்.

1000 போலீசார் பாதுகாப்பு
குண்டு வீச்சால் கூட தகர்க்க முடியாத அளவுக்கு பலமான தனி சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். இந்த அறைக்குள்தான் கடந்த இரண்டு வருடமாக அடைக்கப்பட்டிருந்தான் கசாப். ஒரு தீவிரவாதிக்காக 1000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய பாதுகாப்புகளிலேயே இதுதான் மிகவும் விலை உயர்ந்த பாதுகாப்பாம்.

கருணை மனு அனுப்பிய கசாப்
உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்யநிலையில் இதை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு அவன் கருணை மனுவை அனுப்பி வைத்தான் கசாப்.

கசாப்புக்கு டெங்கு காய்ச்சல்
கருணை மனு அனுப்பியிருந்த கசாப்பிற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் தாக்கியது. இது டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் என்பதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

கருணை மனு நிராகரிப்பு
ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி நவம்பர் 5ம் தேதியே கசாப்பின் கருணைமனுவை நிராகரித்துவிட்டார். இந்த தகவல் மகாராஷ்டிரா மாநில உள்துறைஅமைச்சகத்திற்கு நவம்பர் 8ம் தேதியே தெரிவிக்கப்பட்டுவிட்டது. இதன்பின்னர் பாகிஸ்தான் அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. கசாப்பின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாம்.

மும்பையிலிருந்து புனே ஜெயில்
மும்பை ஆர்தர்சாலை சிறையில் இருந்த கசாப் மிக ரகசியமாக புனேயில் உள்ள எர்வாட சிறைக்கு மாற்றப்பட்டான். இந்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே தூக்குதண்டனை பற்றி கசாப்பிற்கு தகவல் தெரியும் என்பதால் மிகவும் அமைதியாக இருந்தானாம். கடைசி ஆசை எதுவும் இல்லை என்றும் கூறிவிட்டானாம். இதனையடுத்து இந்திய விதிமுறைகளின் படி காலை 7.30 மணிக்கு காசப் தூக்கிலிடப்பட்டான். 2008 நவம்பர் 26ம் தேதி இந்தியாவிற்குள் நுழைந்த கசாப்பிற்கு நான்கு ஆண்டுகளுக்குப் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications