சென்னை ஹைகோர்ட் வளாகம் பொது சொத்தன்று: வாயில்கள் அனைத்தும் மூடல்

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வங்கி, தபால் அலுவலகம், தீயணைப்பு நிலையம், காவல் நிலையம், ரயில்வே டிக்கெட் கவுண்ட்டர் போன்ற அலுவலகங்கள் இயங்கி வருவதால் விடுமுறை நாட்களிலும் கூட ஏதாவது ஒரு நுழைவு வாயில் திறந்திருக்கும். மேலும் சில நுழைவுவாயில்கள் பாதி திறந்த நிலையில் இருக்கும். இந்நிலையில் நீதமன்ற வளாகம் முற்றிலும் மூடப்படுவது குறித்து கடந்த 22ம் தேதி உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் (நிர்வாகம்) வி.விஜயன் வழக்கறிஞர்கள் சங்கங்கள், உயர் நீதிமன்ற அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது,
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் அனைத்து நுழைவு வாயில்களும் 24ம் தேதி (நேற்று) மாலை 6 மணியில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிவரை பூட்டப்பட்டுவிடும். எனவே அந்த நாட்களில் பொதுமக்கள் யாரும், உயர் நீதிமன்ற வளாகத்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நீதிமன்ற அதிகாரி ஒருவர் கூறுகையில்,
உயர் நீதிமன்ற வளாகம் ஒன்றும் பொது சொத்து கிடையாது. இந்த வளாகத்தை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் சில இந்த வளாகத்தை குறுக்கு பாதையாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது ஒன்றும் பொது வழி இல்லை என்பதை அனைவருக்கும் நினைவுபடுத்த ஆண்டுதோறும் ஒரு நாள் உயர் நீதிமன்ற வளாகம் முற்றிலும் மூடப்படும். இதற்கான உத்தரவை ஆண்டுதோறும் தலைமை நீதிபதி பிறப்பிப்பபார் என்றார்.
இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகங்களை மூடிவிட்டு அனைவரும் வெளியேறுமாறு நேற்று மாலை அறிவுறுத்தப்பட்டது. அனைவரும் வெளியேறியவுடன் நேற்று மாலை உயர் நீதிமன்ற வளாகத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன.












Click it and Unblock the Notifications