40 வருஷ உறவு..சிங்கிள் சிங்கமாக வலம் வந்த காலம்.. உதறிய எதியூரப்பா விஸ்வரூபமெடுப்பாரா?
கடந்த 30 ஆண்டுகாலமாக பாஜகவை கர்நாடகத்தில் கட்டியெழுப்பியவரும் எதியூரப்பாதான். தென்னகத்தில் பாஜக காலூன்றவே முடியாது என்று எல்லோரும் வாதிட்டுக் கொண்டிருந்த காலத்தில் பாஜகவை கர்நாடகா மாநில ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியவரும் அவரே.

20 வயதில் ஆர்.எஸ்.எஸ்.
தமது 20வயதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்த அவர் அதன் பின்னர் அரிசி ஆலையில் பணிக்கு சேர்ந்தார். அந்த அரிசி ஆலை உரிமையாளர் மகளையே திருமணம் செய்து கொண்டார். 1972-ம் அண்டு ஜனசங்கத்தின் சிகரிபுரா முனிசிபாலிட்டியின் தலைவரானார். எமர்ஜென்சி காலத்தில் 18 மாதம் சிறைவாசம் அனுபவித்தவர்.

சுழிபோட்ட 1983
1983-ம் ஆண்டு கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் 110 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களைக் கைப்பற்றியது பாஜக. பாஜக 7.93 % வாக்குகளைப் பெற்றது. அப்போது பாஜகவின் மாநில தலைவராக இருந்தவர் எதியூரப்பா.தென்னிந்தியாவிலேயே முதல் 18 பாஜக எம்.எல்.ஏக்களில் எதியூரப்பாவும் ஒருவர். அப்போது ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையிலான ஜனதா கட்சி அரசுக்கு பாஜக ஆதரவளித்தது. அதன் பின்னர் அந்த ஆட்சிக்கான ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டது.

சிங்கிள் சிங்கமாக எதியூரப்பா
1985-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 116 தொகுதியில் போட்டியிட்ட பாஜக 2 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. அதன் வாக்கு விழுக்காடும் கூட 3.88 ஆக குறைந்து போனது. இத்தேர்தலில் ஜனதா கட்சி 43%, காங்கிரஸ் கட்சி 40.82%ம் பெற்று இருந்தது. பாஜகவால் இந்த இரு கட்சிகளின் நிழலைக் கூட தொட முடியாத ஒரு நிலைதான் அப்போது! வெற்றி பெற்ற பாஜக எம்.எல்.ஏக்களில் மற்றொருவர் கட்சி மாற சிங்கிள் சிங்கமாக இருந்தார் எதியூரப்பா!

மீண்டும் எம்.எல்.ஏ
1989-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கிறது கர்நாடகா! மொத்தம் 118 தொகுதிகளில் இம்முறை போட்டியிட கிடைத்ததோ 4 இடங்கள்தான்! இப்பொழுதும் பாஜகவின் எம்.எல்.ஏ.வாக எதியூரப்பா தேர்வாகிறார். இத்தேர்தலில் 4.14% வாக்குகளை பெற்றது பாஜக. இந்தத் தேர்தலில் ஜனதா கட்சியின் வீழ்ச்சி தொடங்குகிறது. ஜனதா கட்சியிலிருந்து ஜனதா தள் உருவாகிறது. ஜனதா கட்சி (ஜேபி) கட்சி 217 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களையும் ஜனதா தளம் 209 தொகுதிகளில் போட்டியிட்டு 24 இடங்களிலும் வெல்ல காங்கிரஸ் அலை வீசியது.

ஜனதா வீழ்ச்சியும் பாஜக எழுச்சியும்
ஜனதா கட்சி பிளவால் 1991-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 4 மக்களவைத் தொகுதிகளைப் பெறும் அளவுக்கு பாஜகவின் பலம் கிடைத்தது. இதுவே தென்னிந்தியாவில் பாஜக பெற்ற முதல் மக்களவை தேர்தல் வெற்றியாகும். இந்த வெற்றியின் போது கர்நாடக பாஜக தலைவராக இருந்தவர் எதியூரப்பா.

சாதித்த எதியூரப்பா
1994-ம் ஆண்டு தேர்தலில் அயோத்தி விவகாரம் பாஜகவுக்கு கை கொடுக்க முதல் முறையாக 44 தொகுதிகளை கர்நாடகத்தில் பாஜக கைப்பற்றியது. தென்னக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக பாஜக, எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் பெற்றது. 1998 மக்களவைத் தேர்தலில் 13 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தவர் எதியூரப்பா.

கவிழ்த்த எஸ்.எம்.கிருஷ்ணா
1999- ம் ஆண்டு எல்லாமே தலைகீழாகிப் போனது. எஸ்.எம். கிருஷ்ணா தலைமையில் காங்கிரஸ் அரசு அமைக்க எதியூரப்பா சொந்த தொகுதியிலேயே தோற்றுப் போனார். இங்கிருந்துதான் எதியூரப்பாவின் சறுக்கல் தொடங்கவும் செய்தது எனலாம். அப்போதுதான் பாஜகவில் அனந்தகுமார், நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுக்கிறார்.

சரிவின் தொடக்கம் 2004
2004-ம் ஆண்டு எதியூரப்பா பாஜக தலைவராக இருந்தாலும் அனந்தகுமார் உள்ளிட 2ம் நிலை தலைவர்கள் பலரதும் எதியூரப்பாவுக்கு அடுத்த நிலையில் 'எதற்கும்' தயாராக காத்திருந்தனர். இத்தேர்தலில் 79 தொகுதிகளைப் பெற்று மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டரசை அமைத்தது. இது 20 மாதங்கள் நீடித்தது. எதியூரப்பா துணை முதல்வராக இருந்தார். அவரது முதல்வர் ஆசை நிறைவேறாமல் போனது.

தென்னகத்தில் முதலாவது பாஜக அரசு
2008-ம் ஆண்டு பாஜகவுக்கு பெரு வெற்றி கிடைத்தது. தென்னகத்தில் முதலாவது ஆட்சியை கர்நாடகத்தில் அமைத்தது பாஜக. ஆனால் அதற்குள் ஏராளமான 'பாஜக தலைவர்கள்' கர்நாடக மாநில அரசியலில் தலைதூக்க சுரங்க ஊழலில் சிக்கி தமது முதல்வர் பதவியை பறிகொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் எதியூரப்பா. அப்பொழுதே அவருக்கு பாஜகவில் முடிவுரை எழுதப்பட்டுவிட்டது. எத்தனை கலகக் குரல் எழுப்பினாலும் கண்டுகொள்ளப்படாத நபராகவே இருந்தார்.

40 ஆண்டுகால உறவு துறப்பு
தற்போது பாஜகவுடனான தமது 40 ஆண்டுகால உறவை தூக்கிப் போட்டுவிட்டு கர்நாடக ஜனதா கட்சி என்ற தனிக் கட்சியில் ஐக்கியமாகி தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். ஆனால் ஒரே ஒரு கேள்வி.. பாஜகவின் தென்னக ஆட்சிக் கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு மாற்று சக்தியாக திகழ்வாரா எதியூரப்பா என்பதுதான்!












Click it and Unblock the Notifications