நாம ரெட்டி கூடவே கூட்டு சேரலாம்.. ராகுலுக்கு ஆந்திர காங்கிரஸார் கோரிக்கை
ஹைதராபாத்: லோக்சபா தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸுடன் கூட்டணி சேர வேண்டும் என்று ஆந்திர மாநில காங்கிரஸார் பலரும் ராகுல் காந்திக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த, தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது, நாக்கை சுற்றிக் கொண்டு போய் உதடுகளைத் தொடுவது போன்ற வேலைகளில் கில்லாடியானவர்கள் காங்கிரஸ்காரர்கள். படு தெளிவாக குழம்பிக் கொண்டு மற்றவர்களையும் குழப்புவதில் அவர்கள் எமகாதகர்கள்.
ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரஸில் இருந்தவரை அவரைக் கண்டுக்கவே இல்லை. மாறாக டென்ஷன் மேல் டென்ஷனாக்கி வந்தனர். அவரும் கடுப்பாகி வெளியே போய் தனிக் கட்சி ஆரம்பித்து சட்டசபை இடைத் தேர்தலில் காங்கிரஸுக்கு பெரிய ஆப்பாக வைத்து விட்டார். அதன் பிறகுதான், அடடே ரெட்டி போச்சே என்று வடை போன கதையாக வடிவேலு ஸ்டைலி்ல யோசிக்க ஆரம்பித்தனர் காங்கிரஸார்.
இந்த நிலையில் தங்களுடன் கூடவே இருந்த ரெட்டியை இப்போது கூட்டணிக்காக மறுபடியும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை கையில் எடுத்துள்ளனர் ஆந்திர மாநில காங்கிரஸார்.
வரும் லோக்சபா தேர்தலை ராகுல் காந்தி கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து கணக்கெல்லாம் போட்டு வகுத்துக் கொடுக்கும் உத்தியோடு சந்திக்கப் போகிறது காங்கிரஸ். ராகுலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனது டீம் ஒன்றை அனுப்பி கட்சியினரின் மன ஓட்டத்தை அறிந்து வருகிறார். அந்த வகையில், ஹைதராபாத்துக்கும் ஒரு குரூப் வந்தது.
அவர்களில் ஒருவர் விஷ்வ ஜித்ரானே. இவர் தெலுங்கானா பகுதியில் ஒரு ரவுண்டு அடித்தார். பின்னர் திருப்பதிக்கு வந்த அவர் கட்சியினரைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்களிடம், நமது கட்சியிலிருந்து பல எம்.எல்.ஏக்கள் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இணைகிறார்களே ஏன்? பணத்துக்காக செல்கிறார்களா? பதவிக்காக செல்கிறார்களா? போன்ற கேள்விகளை கேட்டார். அதற்கு தொண்டர்கள் பதில் அளிக்கையில், ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதால் மக்கள் காங்கிரஸ் மீது வெறுப்பு கொண்டு உள்ளனர். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வந்த ராஜசேகர ரெட்டி குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுப்பதை மக்கள் விரும்பவில்லை என்றனர்.
பலர் ஜெகன் மோகன் ரெட்டிதான் முதல்வர் பதவிக்கு லாயக்கு. அவரை முதல்வராக்கினால் காங்கிரஸுக்கு நல்லது. அது முடியாவிட்டால் ரெட்டியுடன் கூட்டணியாவது சேர வேண்டும் என்றும் அவர்கள் ஆலோசனை கூறினார்களாம்.
ஜெகன் மோகன் ரெட்டிக்கு மக்களிடம் மட்டுமல்லாமல் காங்கிரஸாரிடமும் நல்ல செல்வாக்கு இருப்பதைக் கண்ட மேலிடத் தூதர், அதை ராகுலிடம் தெரிவிப்பார் என்ற நம்பிக்கையில் காங்கிரஸார் உள்ளனர்.
தற்போது ஜெகன் மோகன் ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் உள்ளே இருப்பதால் அவரது தங்கை ஷர்மிளா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கும் போகிற இடமெல்லாம் செம கூட்டம் கூடுவதையும் காங்கிரஸ் கவலையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications