வீரப்பன் காட்டில் மீண்டும் துப்பாக்கிகளுடன் மர்ம மனிதர்கள்.. போலீஸ் தீவிர விசாரணை
கொளத்தூர்: சேலம் மாவட்டம் கொளத்தூர் வனப்பகுதியில் துப்பாக்கிகளுடன் அலைந்து திரிந்த 3 மர்ம நபர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
மேட்டூர், கொளத்தூர் வனப்பகுதி ஒருகாலத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பன் கோட்டையாக இருந்தது. வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் ஆயுதங்களுடன் நடமாடிய இந்த வனப்பகுதியில் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அசம்பாவிதங்கள் எதும் நடைபெறவில்லை.
இருப்பினும் இக்காட்டுப் பகுதியை வனத்துறையினரும் அதிரடிப்படையினரும் கண்காணித்தே வருகின்றனர். இந்நிலையில் வீரப்பன் காட்டில் மர்ம கும்பல் ஆயுதங்களுடன் நடமாடுவதாக சேலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து மேட்டூர் போலீசார் கொளத்தூர் அருகே உள்ள கோவிந்தபாடி வனப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நாட்டுத் துப்பாக்கிகளுடன் மூன்று பேர் கொண்ட கும்பல் போலீசாரைப் பார்த்ததும் தப்பி ஓடி பதுங்கியது. போலீசார் அவர்களை விரட்டிச் சென்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மூவரும் வேட்டையாடுவதற்காக காட்டுக்குள் திரிந்தனரா? அல்லது வேறு காரணத்துக்காக அவர்கள் காட்டுக்குள் அலைந்தனரா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீரப்பன் காட்டில் மீண்டும் ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் நடமாடிய செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications