'கோர்ட்டுக்கு வர மாட்டேன்': பச்சக் குழந்தை போல கதறிய குற்றவாளி... கட்டி தூக்கி வந்த போலீஸ்!
மானாமதுரை: எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட கொக்கி குமார் இன்று மானாமதுரை நீதிமன்றத்திற்கு வரமறுத்து அழுது அடம் பிடித்தாக கூறப்படுகிறது. போலீசார் அவரை கட்டி தூக்கி வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மருதுபாண்டியர் குருபூஜைவிழாவின் போது நடந்த கலவரத்தில் திருப்பாச்சேத்தி எஸ்.ஐ. ஆல்வின் சுதன் குத்திக்கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பிரபு, பாரதி ஆகிய இருவரும் கடந்த வாரம் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். இதனிடையே இந்த எஸ்.ஐ. கொலைவழக்கில் 6 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள குமார் என்ற கொக்கி குமாரை காவல் நீட்டிப்பிற்காக மானமதுரை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்து அழைத்துள்ளனர்.
தன்னை மட்டும் தனியாக அழைத்த உடன் அச்சமடைந்த கொக்கி குமார் சிறைக்குள்ளே ஓடி ஒளிந்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்த சுவரில் மண்டையை மோதியும் கையை அடித்துக்கொண்டும் அழுதுள்ளான். என்கவுண்டரில் போட்டு விடுவார்கள் என்று பயந்து போய் இப்படிச் செய்துள்ளானாம் கொக்கி குமார். இதைப் பார்த்து சிரித்த போலீசார், கொக்கி குமாரின் கையை கட்டி தூக்கி வந்து வேனில் அமரவைத்துள்ளனர். பின்னர் மானாமதுரை சிறையில் ஆஜர் படுத்தினர்.
மானமதுரை சுற்றுவட்டாரங்களில் கொக்கி போட்டு திருடுவது, மாமூல் வசூலிப்பது போன்றவைகளை செய்து பிரபல ரவுடியாக அறியப்பட்ட கொக்கி குமார் இன்று உயிர்பயத்தில் அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications