சென்னையில் நுழையும் வால்மார்ட்: ஜெயலலிதா அரசு தடுத்து நிறுத்துமா? கருணாநிதி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி, பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கேள்வி: திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரம் கிடைக்கத் தொடங்கப்போவதால், அதன் காரணமாக மின்வெட்டு குறையும் என்கிறார்களே?
பதில்: எப்படியோ, அந்த மின் நிலையங்களில் விரைவில் உற்பத்தித் தொடங்கவுள்ளது. அதன் காரணமாக மின் வெட்டு குறையக்கூடிய வாய்ப்பு இருந்த போதிலும், எண்ணூர், வடசென்னை அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி அளவு குறைந்துள்ளதால், மின் உற்பத்தி பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாம். எண்ணூர் அனல் மின் நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு 5.8 டன்னும், வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு 17.3 டன்னும் நிலக்கரி தேவை.
அனல் மின் நிலையங்களில் பத்து நாட்களுக்கு தேவையான நிலக்கரியை இருப்பு வைக்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால் எண்ணூரில் 2 நாட்களுக்கு தேவையான நிலக்கரியும், வடசென்னையில் ஒரு நாளுக்கு தேவையான நிலக்கரியும் மட்டுமே கையிருப்பில் உள்ளது என்று மத்திய மின் ஆணைய, உற்பத்தி மற்றும் கண்காணிப்பு பிரிவு அறிக்கை கூறுகிறது. நிலக்கரி தேவை குறித்தெல்லாம் முன்கூட்டியே அரசும், மின் வாரியமும் தான் ஏற்பாடு செய்ய வேண்டும்.
கேள்வி: தமிழக ஆளுநரை மாற்றும்படி நீங்கள் டெல்லிக்கு கட்டளையிட்டிருப்பதாகவும், அண்மையில் தங்களைச் சந்தித்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத் போன்றவர்களிடம் ஆளுநரைப் பற்றி புகார் கூறியதாகவும் வார இதழ் ஒன்று தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறதே?.
பதில்: அந்த செய்தியிலே எந்த விதமான உண்மையும் இல்லை.
கேள்வி: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டினை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தமிழக முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்த போதிலும், 'வால்மார்ட்' நிறுவனம் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டினை தமிழகத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியினை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறதே?.
பதில்: வானகரத்தில் 'வால்மார்ட்' நிறுவனத்தின் சார்பில் 7 ஏக்கர் பரப்பளவில் வணிக வளாகமும், அண்ணா நகரில் மாக்கெட்டிங் அலுவலகமும் தொடங்கி அதற்கான பணிகள் நடைபெறுவதாக தகவல்கள் வருகின்றன. மளிகை கடைக்காரர்களை அணுகி குறைந்த விலையில் உங்களுக்கு பொருட்களை விநியோகிக்கிறோம் என்று கூறி, அவர்களை உறுப்பினர்களாக ஆக்குவதற்கான முயற்சியில் தீவிரமாக அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறதாம்.
இந்த செய்திகள் உண்மையாக இருக்குமேயானால் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடுகள் நுழைந்துவிடக்கூடும். சம்பந்தப்பட்டவர்களின் இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் பற்றி விசாரித்தபோது, நாங்கள் சில்லறை வர்த்தகம் செய்யவில்லை, கடைகளுக்கு மொத்தமாக பொருட்களை வழங்கப் போகிறோம் என்று கூறுகிறார்களாம். எனவே தமிழக அரசு இந்த செய்தி உண்மையா என்பதை அறிந்து உடனடியாக அதன் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications