பாகிஸ்தானுக்கு தாரை வார்க்கப்படும் குஜராத்தின் சர் கிரீக்..சில தகவல்கள்
டெல்லி: ஊழல்களில் ஈடுபட்டு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு "சர் கிரீக்" பகுதியை பாகிஸ்தானுக்கு தாரை வார்ப்பதன் மூலம் "தேசத்தையே" வெளிநாடுகளிடம் விற்கிறது என்று கடுமையாக சாடியிருக்கிறார் குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி.
சர் கிரீக் என்பது இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஒரு எல்லைப் பகுதி. அதாவது பஞ்சாப்பின் வாகா எல்லையைப் போன்றது. ஆனால் சர் கிரீக் அமைந்திருக்கும் இடம் அருகே இந்திய ராணுவ முகாம் இருக்கிறது. இந்த முகாம் இருக்கும் இடத்துக்கு செல்வது என்பது வாகா எல்லையைப் போன்ற எளிதானது அல்ல.. மனித நடமாட்டமே இல்லாத, செடி கொடி எதுவுமே இல்லாத பல நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு சகதி மணல் மட்டுமே இருக்கக் கூடிய ‘ரான் ஆப் கட்ச்' பகுதியின் முனையில் இருக்கிறது.
இந்த சர் கிரீக் பகுதியின் ஒரு பகுதியை ஏற்கெனவே ஆக்கிரமித்துவிட்ட பாகிஸ்தானுக்கு இப்பொழுது ‘தாரைவார்க்கவே' முடிவு செய்துவிட்டது இந்தியா என்கிறார் மோடி. அங்கு இயற்கை வளம் இருக்கிறது. இந்த பகுதியை தாரை வார்த்தால் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும் என்கிறார் மோடி.
சரி ,, சர் கிரீக் பகுதியை பற்றி கூடுதல் தகவல்களை இப்பொழுது பார்க்கலாம்

கட்ச் பிரதேசமும் சர் கிரீக்கும்
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம்தான் நாட்டிலேயே மிகப் பெரிய மாவட்டம். கட்ச் வளைகுடாவும் அரபிக் கடலும் சூழ்ந்த பிரதேசம். ஆனால் இந்த மாவட்டத்தில் பெரும்பகுதி மனிதர்கள் வாழ முடியாத நிலப்பரப்பு கொண்டது. "ரான் ஆப் கட்ச்" என்றழைக்கப்படுகிற பெரும் பிரதேசம், மழைக்காலங்களில் நீர் நிறைந்ததாக இருக்கும். கோடை காலங்களில் மணற்பாங்கானதாகவே இருக்கும். மனிதர்களும் உயிரினங்களும் வாழத் தகுதியற்ற இப்பெரு நிலப்பரப்பு பாகிஸ்தானின் சிந்து மாகாணம் வரை நீண்டு கிடக்கிறது. சிந்து மாகாணத்தையும் குஜராத்தின் கட்ச் பகுதியையும் பிரிக்கக் கூடிய சிறிய நீர்பரப்புதான் சர் கிரீக்.

சர் கிரீக் சர்ச்சை
சர் கிரீக் ஒருவகையிலான சதுப்பு நிலப் பகுதி என்றாலும் இயற்கை எரிவாயும் எண்ணெய் வளமும் அதிகம் இருக்கக் கூடிய இடமாக கருதப்படுகிறது. குஜராத் கடற்பரப்பு மற்றும் ரான் ஆப் கட்ச் எனப்படும் நிலப் பகுதி பாகிஸ்தானிலிருந்து கடத்தல் பொருட்கள் கொண்டுவருவதற்கும் தீவிரவாதிகள் ஊடுருவுவதற்குமான வாய்ப்பு உள்ள இடம். இந்தியாவின் பாதுகாப்புக்கு எளிதான அச்சுறுத்தல் உள்ள பகுதி. இந்த சர் கிரீக் அமைந்திருக்கும் கட்ச் பகுதியால்தான் பாகிஸ்தானுடன் யுத்தமே வந்தது என்பதும் வரலாறு.. அது 1965-ல்!

1965 யுத்தமும் கட்ச் வளைகுடாவும்
இமயமலையின் சியாச்சின் பனிமுனையை மிகவும் ஆபத்தான போர்முனை என்கிறோம் நாம். ஆனால் அப்பனிமுனைக்கு போய்வரும் நமது பாதுகாப்பு துறை அமைச்சர்கள் இதுவரை போகாத ஒரு இடம் கட்ச் பகுதியில் இருக்கும் ராணுவமுகாம்தான். சதுப்பு நிலத்தின் வழியாக சுமார் 100 கி.மீ தொலைவுக்கு (குடிக்க தண்ணீர்,உணவு எதுவும் கிடைக்காத மரம், செடி கொடி கண்ணுக்குப் படாத தேசம்) பயணிக்க வேண்டும். 1965-ம் ஆண்டு இந்த ரான் ஆப் கட்ச் பகுதியில்தான் பாகிஸ்தான் தமது ஆக்கிரமிப்பைத் தொடங்கியது. இதன் பின்னரே இந்தியா- பாகிஸ்தான் போரும் வெடித்தது. போரின் முடிவில் குறிப்பிட்ட சர் கிரீக்கின் ஒரு பகுதி பாகிஸ்தான் வசமானது. இதற்குப் பதிலடியாகத்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்தியப் படைகள் அணிவகுத்தது. இதனால்தான் இப்பகுதி பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

யாருக்கு சொந்தம்?
இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பாக சிந்து மாகாணம் பாகிஸ்தான் வசமானது. கட்ச் பகுதி இந்தியாவுடனேயே இருந்துவிட்டது. இதனால் சர் கிரீக்கும் இந்தியாவுக்கே சொந்தமானதாகிவிட்டது. ஆனால் சிந்து மாகாணத்துக்கும் கட்ச் மகாராஜா ராவ் மஹாராஜ்க்கும் இடையேயான ஒரு ஒப்பந்தம் இருக்கிறது.. அதன் அடிப்படையில் சர் கிரீக் பகுதி முழுவதுமே பாகிஸ்தானுக்கு சொந்தம் என்கிறது அந்நாடு.

பேச்சுவார்த்தை
சர் கிரீக் பகுதி தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையே 1969-ம் ஆண்டு முதல் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் சிந்து மாகாண பிரதிநிதிகள் டெல்லி வந்து குஜராத் மாநில பிரதிநிதிகளுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி சென்றிருக்கின்றனர். இந்த விவகாரத்துக்கு மூன்றாம் தரப்பு தலையீடு கூடாது என்பது இந்தியாவின் நிலைப்பாடு. சர் கிரீக் பகுதியை பாகிஸ்தானுக்கு தாரை வார்க்கக் கூடாது. அது நமது நாட்டின் பாதுகாப்புக்கு ப்ரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்கிறார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.












Click it and Unblock the Notifications