For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னைப் போல 10 பேர் வரலாம், கருணாநிதியைப் போல இன்னொருவர் வர முடியாது- அன்பழகன்

Google Oneindia Tamil News

Anbalagan
சென்னை: என்னைப் போல பத்து பேரை தயார்படுத்தி விடலாம். ஆனால் கருணாநிதியைப் போல இன்னொருவர் கிடைப்பது கடினம் என்று கூறியுள்ளார் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்.

அன்பழகனின் 91வது பிறந்தநாளையொட்டி சென்னை தங்கச்சாலை மணிக்கூண்டு பகுதியில், திமுகசார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் அன்பழகன் சிறப்புரையாற்றினார்.

அவரது பேச்சிலிருந்து சில துளிகள்...

எனக்கு 91 வயது என்று உண்மையில்லாத ஒரு செய்தியை கலைஞர் அவர்களே தூண்டிவிட்டு எல்லோரும் அதற்காக ஒரு விழா எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். என்னைக் கேட்டால் எனக்கு 32 வயதுதான். சுயமரியாதைக்காரனுடைய உணர்வு கிழவன் ஆனாலும் இளைஞனாகத்தான் இருப்பான். எண்ணங்கள் இளமையாக இருந்தால், உடல் தானாக வயதாகிவிடாது.

கலைஞர் மிகப்பெரிய அறுவை சிகிச்சையை பெற்று பிழைப்பாரோ மாட்டோரோ என்று கவலையிலே ஒரு மாத காலம் இருந்து பிழைத்து வந்து இன்றைக்கும் இந்த மேடையிலே வந்து அமருகிற அளவுக்கு அவருக்கு ஒரு மனப்பான்மை இருக்கிறது என்றால், கருணாநிதி என்ற பெயரைவிட சுயமரியாதை கருணாநிதி என்ற பெயர்தான் அதற்கு காரணம்.

என் மனைவியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு இப்படிப்பட்ட விழா தேவையில்லை என்று சொன்னேன். 91 வயது என்ற பெயரால் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியை நடத்தாமல் இருக்கக் கூடாது கலைஞர் அறிவித்து விட்டார். அவர் அறிவித்துவிட்டால் நண்பர் கி.வீரமணி சொன்னதைப்போல, அவர் சொல்லி விட்டால் நான் எதையும் ஏற்றுக் கொள்பவனே தவிர மறுப்பவன் அல்ல.

என் மனைவி மருத்துவமனையில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளார். மனித வாழ்க்கை என்பது தொடங்குவது போல முடிந்துவிடும். அது என்றைக்கும் நிலையல்ல. அது நமக்கும் அப்படித்தான். நம்முடைய நண்பர்களுக்கும் அப்படித்தான். உறவுக்கும் அப்படித்தான். மனைவிக்கும் அப்படித்தான். அதை உணருகிற தகுதி எனக்கு இருக்கிறது. ஆகவே இந்த விழாவிலே கலைஞரோடு வந்து கலந்து கொண்டிருக்கிறேன்.

கலைஞர்தான் எனக்கு மணிவிழாவும் நடத்தினார். தொடர்ந்து அவர்தான் என்னை பாராட்டிக்கொண்டிருக்க வேண்டுமே தவிர, நான் அவரை பாராட்டுவது என்பது ஒரு கட்சிக்காரன் என்பது போல் அமையுமே தவிர, நானே ஏற்பாடு செய்து, நானே அவருக்கு விழா எடுக்கிற அளவுக்கு ஒரு வாய்ப்பு எனக்கு இல்லை. மனம் இருக்கலாம். வாய்ப்பு இருக்க வேண்டும். வாழ்க்கை என்பது எண்ணம் மட்டும் அல்ல. எண்ணங்களுக்கு சில வாய்ப்பு அமைய வேண்டும்.

இன்றைக்கு எனக்கு இவ்வளவு பெரிய பெருமை கிடைத்திருக்கிறது என்று சொன்னால், உலகத்தில் இதைவிட ஒரு பெரிய பதவியே இல்லை. அமெரிக்காவினுடைய குடியரசுத் தலைவர் கூட என்னுடைய பதவிக்கு ஈடாக பதவியை பெற்றிருக்கவில்லை. என்னவென்றால் உங்களுடைய அன்பையெல்லாம் பெறக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது அல்லவா.

அன்பழகன் 91 என்ற ஒரே ஒரு பெயருக்காக இவ்வளவு பெயர் கூடியிருக்கிறீர்கள். ஆனால் கலைஞர் எழுதியிருக்கக்கூடிய எழுத்து ஒரு காரணம். கடந்த 2 நாட்களுக்கு முன்னால் அவர் எழுதிய மடல் உங்களையெல்லாம் மிகுந்த உணர்ச்சியோடு இந்த விழாவில் கலந்துகொள்ள செய்திருக்கிறது. எனக்கு அதில் ஒரு மகிழ்ச்சி. எனது பெயர் நல்ல காரியத்திற்கு பயன்பட்டதே என்று.

என்னைப் பாராட்டுவதில் கலைஞருக்கு ஒரு மகிழ்ச்சி. எப்படியென்றால் தன்னைத்தானே பாராட்டிக்கொள்வதைப்போல. மனிதனுக்கு என்ன இருந்தாலும் யாரையாவது பாராட்டி பேசினால்தான் கொஞ்சம் மகிழ்ச்சி கிடைக்கும். பிறரை திட்டிக்கொண்டே இருந்தால் மகிழ்ச்சி கிடைக்காது. இன்னம் சொல்லப்போனால் கசப்புணர்வு நம்மிடத்திலே வளர வளர நம்முடைய வளர்ச்சி குறையும். மகிழ்ச்சி உணர்வு வளர வளர நம்முடைய வளர்ச்சி, வளர்ச்சி என்றால் உடல் வளர்ச்சி, உள்ள வளர்ச்சி. இங்கே காதர்மொய்தீன் சொன்னதைப்போல ஒரு நிறைவு ஏற்படுகிறது.

நான் திருமண விழாக்களில் கலந்து கொள்கிறபோது, பேசுகிறபோது ஒரு மகிழ்ச்சி. அந்த திருமணங்களிலே கூட பேசுகிறவர்கள் என்ன பேசுகிறார்கள் என்றால், இந்த மணமக்கள் கலைஞரும் பேராசிரியரும் போல ஒன்றாக வாழ வேண்டும். அதோடு நிறுத்தினால்போதும், யாரு மாப்பிள்ளை யாரு பொண்ணு என்று சொல்லாம. அப்படி சொல்ல நேரிடுமானால், ஒருவேளை எனக்குத்தான் வயது அதிகம். கலைஞருக்குத்தான் வயது குறைவு.

மனித வாழ்க்கையில், அண்ணாவோடு இணைந்து பழகியபோது என்னை அறியாமலேயே ஒரு மகிழ்ச்சி. அவருடைய பெருமைகூட எனக்கு தெரியாது. அவருடைய அறிவாற்றல் எனக்கு தெரியாது. அவருடைய அறிவாற்றலையெல்லாம் கடன் வாங்கியவர் கலைஞர். நான் அவருடைய அறிவாற்றலைப்பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படவில்லை.

ஒரு கொள்கை, திராவிடர் இயக்கம், சுயமரியாதை உணர்வு, பகுத்தறிவு வாதம் அந்த உணர்வு எனக்கு ஒரு எழுச்சி. என்னுடைய சிறுவயதிலே என்னுடைய மனதிலே பட்ட அடிப்படை உணர்வு. அந்த மகிழ்ச்சியிலே அண்ணாவோடு இருப்பேன். அண்ணா இனிமையாக பழகுவார். அவருடன் உட்கார்ந்து உரையாடினாலே போதும்.

இப்போது கலைஞரிடத்திலே அண்ணாவிடம் பழகிதைப்போன்ற நிலை இல்லை. அண்ணா அவர்களிடத்திலே அறியாதவனாக பழகினேன். இப்போது கலைஞரிடத்திலே அறிந்தவனாக பழகுகிறேன். நான் அறியாதவனாக பழகியபோது என்னோட மனநிலை அண்ணாவை புகழ்ந்து அவரோடு எங்காவது போய் வந்தாலே போதும்.

கலைஞரிடத்திலே நான் பழகுவது ஒரு மிகப்பெரிய இயக்கத்தை கட்டி காப்பாற்றுகிற பொறுப்பிலே இருக்கிறார். அவரைவிட பெரிய பொறுப்பில் இன்று யாரும் இல்லை. அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்குக் கூட அந்த பொறுப்பு இல்லை. கட்சி பெரியதாக இருக்கலாம். ஏனென்றால் ஒரு அரசியல் கட்சியை மட்டும் கலைஞர் காப்பாற்றவில்லை. ஒரு இனத்தை காப்பாற்றுகிறார். இழந்துபோன மானத்தை காப்பாற்றுகிறார்.

அண்ணாவும் கலைஞரை நம்பினார். கொள்கையை காப்பாற்றக்கூடியவர். லட்சியத்தை பரப்பக்கூடியவர். திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடர்ந்து நடத்தக்கூடியவர். அதேபோல கலைஞரும் அண்ணாவின் மேல் வைத்த பற்றுக் காரணமாகத்தான், அண்ணா அவர்கள் மறைந்த போது, இரங்கல் பா ஒன்று கலைஞர் இசைத்தபோது, அதில் சொல்லுகிறார் அண்ணா அவர்களே நீங்கள் செல்லுகிறபோது உங்கள் இதயத்தை எனக்கு இரவலாக கொடுத்துவிட்டு செல்லுங்கள். நான் வருகிறபோது அந்த இதயத்தை தங்கள் மலரடியிலே வைக்கிறேன் என்று. அந்த இதயம் வேலை செய்கிறது. அந்த இதயம் நமக்கு வழிகாட்டுகிறது. அந்த இதயம் பெரியாருக்கும் நமக்கும் இடையே பாலம் அமைத்திருக்கிறது. இன்னம் சொல்லப்போனால் பெரியார் ஊட்டிய உணர்வை தொடர்ந்து காப்பாற்றுகிற ஒரு பெரிய ஆற்றலை அண்ணா உருவாக்கினார். அதை காப்பாற்ற வேண்டிய மாபெரும் கடமையை கலைஞர் ஏற்றிருக்கிறார். எனவே அந்த முறையில் கலைஞர் தமிழ்நாட்டுக்கு கிடைக்க முடியாத ஒரு செல்வமாக கிடைத்திருக்கிறார்.

நான் இல்லையென்றால் என்னைப்போல பத்து பேர் தயாராகுவான். கலைஞர் இல்லையென்றால் இன்னொரு கலைஞர் தயாராகுவது மிக கடினம். கலைஞர் அவர்களே என்னுடைய 91 வயதிலே வாழ்த்து கூறுனீர்கள். நான் நூறாவது வயதிலேயேயும் உங்களுக்கு வாழ்த்து கூறுவேன் என்றார் அன்பழகன்.

English summary
DMK general secretary Anbalagan hailled Karunanidhi in a meeting held in Chennai on the occasion of his 91st birth day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X