எம்.எல்.ஏ. தம்பியின் கார், போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியோடு மிருக வேட்டை: 5 பேர் கைது
நெல்லை: திருநெல்வேலி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய திருக்குறுங்குடியில் மிளா மான் வேட்டையாடச் சென்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையையும், அங்கு வாழும் மிருகங்களையும் பாதுகாக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் அதிகாரிகள் துணையோடு மிருக வேட்டை தினமும் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. மிருகங்களை பாதுகாத்திட போதிய சட்டங்கள் இருந்தும் வேட்டை கும்பல்கள் பிடிபட்டவுடன் தப்பித்துக்கொள்ளும் சூழலும் உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு முதல் சிவகிரிவரை உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வேட்டை கும்பல்களின் ராஜ்யமாகத் தான் உள்ளது. மிருக வேட்டைக்கு செல்லும் கும்பல்கள் மான், மிளா, முயல், காட்டுப் பன்றி உள்ளிட்டவைகளை வேட்டையாடி விட்டு வனப் பகுதிகளில் தீயை வைத்துவிட்டு தப்பி விடும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மிருக வேட்டைக்கு சென்ற ஒரு கும்பல் போலீசில் சிக்கியது. மேற்குத் தொடர்ச்சி மலை அருகே திருக்குறுங்குடியில் மிளா மான் வேட்டைக்கு சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர்கள் பயன்படுத்திய கார் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வின் தம்பிக்கு சொந்தமானது என்றும் ,துப்பாக்கி கடலோரப் பகுதி காவல்துறை அதிகாரிக்கு சொந்தமானது என்றும் கைதானவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் இருந்து மூன்றடைப்பு காவல் நிலையத்திற்கு அந்த 5 பேரும் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications