அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை- கடும் நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
சென்னை: பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்ரீவைகுண்டம் வட்டம், கிளாக்குளம் பகுதியில் 12 வயது மாணவி புனிதாவை பாலியல் வன்புனர்ச்சி செய்ததோடு கோரமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து தமிழகம் மீள்வதற்குள்ளாக, நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்தில் 9 வயது சிறுமியை 2 காமுகர்கள் வன்புனர்ச்சி செய்த கொடூரச் செய்தியும் வந்துள்ளது.
இந்த இரு கொடுமைகள் மனிதநேய நெஞ்சங்களை உலுக்குவதாக உள்ளன. குழந்தைகளின் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த ஈவிரக்கமற்ற தாக்குதல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்விரு குழந்தைகளின் குடும்பத்தினரது வேதனையில் கட்சி பங்குகொள்கிறது.
இந்த இரண்டு குற்றச் செயல்களிலும் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது, தமிழக அரசு விரைவான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.
தூத்துக்குடி, நாகை மாவட்டங்களில் அந்த இரு சிறுமியருக்கும் நேர்ந்த கதியால் துயரத்தில் மூழ்கியுள்ள குடும்பங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்குவதோடு, இக்கொடுமைகளைச் செய்த கயவர்கள் மீது வழக்கு தொடுத்து, விரைவு நீதிமன்றத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணையை முடித்து உரிய தண்டனை வழங்கிடச் செய்யவும் அரசு முன்வர வேண்டும்.
மேலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் யாரானாலும் அவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்துவதே இத்தகைய சமூகவிரோதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications