Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதா நடத்தியது நாடகம்; அவரை மத்திய அரசு அவமதிக்கவில்லை-மு.க.ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

Stalin
நெல்லை: முதல்வர்கள் கூட்டத்தில் ஜெயலலிதாவை மத்திய அரசு அவமதிக்கவில்லை. ஆனால் ஜெயலலிதா வெளிநடப்பு என்று நாடகம் நடத்தி உள்ளார் என்று திமுக பொருளாளார் மு.க.ஸ்டாலின் கூறினார்.

நெல்லை நாடாளுமன்றத் தொகுதி திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் பாளை ரெட்டியார்பட்டியில் நடந்தது. நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமிபாண்டியன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில்,

கடந்த 15ம் தேதி திருச்சியில் முதல் நாடாளுமன்ற செயல்வீரர்கள் கூட்டம் தொடங்கியது. இது 9வது செயல்வீரர்கள் கூட்டம். தேர்தலில் இப்படி பணியாற்ற வேண்டும் என்று உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய ஆலோசனைகளை கேட்டு உங்களில் ஒருவனாக செயல்பட வந்துள்ளேன்.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக சிந்திக்கும் ஒரே கட்சி திமுக தான். நம்மைப்போல் வெற்றி அடைந்தவர்களும் இல்லை. தோல்வியை கண்டவர்களும் இல்லை. வெற்றி தோல்வியை சமமாக கருதுபவர்கள்தான் திமுகவினர். கருணாநிதி என்றும் மக்களுக்காக பணியாற்றி வருகிறார். நாம்தான் ஆளும் கட்சி என்று மக்கள் நம்மிடம் தான் குறைகளை சொல்கிறார்கள்.

டெல்லயில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் நானும் முன்பு கலந்து கொண்டுள்ளேன். நாம் நமக்கு என்ன என்ன வேண்டும் என்று பேச நினைக்கிறோமோ அதை தயார் செய்து முன்கூட்டியே பிரதமர் கையில் கொடுத்து விடுவோம். கூட்டத்தில் அதில் குறிப்பிட்டுள்ள கருத்துகளை பேசுவோம். அப்போது நீண்ட நேரம் பேசினால் மணி அடிப்பது வழக்கம். ஆனால் மணி அடித்தவுடன் பேசக்கூடாது என்பது மரபல்ல. அதன்பிறகு தேவைப்பட்டால் நாம் கூற நினைப்பதை பேசிவிட்டு அமரலாம். அதுவும் ஒவ்வொரு மாநில முதல்வர்களையும் ஆங்கில முதல் எழுத்து வரிசைப்படிதான் பேச கூப்பிடுவார்கள்.

ஆனால் ஜெயலலிதா முன்கூட்டியே பேச வேண்டும் என்று அனுமதி கேட்டு பேசி விட்டு , வெளிநடப்பு என்று நாடகம் நடத்தி உள்ளார். அவரை டெல்லியில் மத்திய அரசு அவமதிக்கவில்லை.

ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுக்கு பிறகும் மின் வெட்டுக்கு காரணம் திமுக தான் என்று கூறுகிறார் ஜெயலலிதா. அவர் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு வருகிறது. விவசாயிகள் தற்கொலை சம்பவங்களை அரசு மூடி மறைக்கிறது.

தி.மு.க. நடத்தும் நாடாளுமன்ற தேர்தல் செயல் வீரர்கள் கூட்டத்தை ஜெயலலிதா அரசு தடுத்து வருகிறது. சீப்பை ஒழித்து விட்டால் திருமணம் நின்று விடாது. தூத்துக்குடி கூட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அங்கு திட்டமிட்டப்படி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும்.

நாடாளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் வந்தாலும் நாம் தயாராக இருக்கவே இந்த ஆலோசனை கூட்டம். நீங்கள் வீட்டுக்கு வீடு திண்ணை பிரசாரம் செய்து தீவிரமாக பணியாற்றினால் 40-க்கு 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற முடியும் என்றார் ஸ்டாலின்.

தூத்துக்குடி கூட்டம் வேறு இடத்துக்கு மாற்றம்:

இந் நிலையில் மாநகராட்சி அனுமதி மறுத்ததால் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.

ஸ்டாலின் கலந்து கொள்ளும் இந்தக் கூட்டம் இன்று மாலை தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடக்க இருந்தது. இதற்காக மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடந்து வந்தது. ஆனால் அந்த இடத்தில் மேடை மற்றும் பந்தல் அமைக்க மாநகராட்சி திடீரென அனுமதி மறுத்துவிட்டது.

இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் இந்த பந்தலை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றத் தொடங்கினர். இந்நிலையில் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திர பாபு, மனுதாரர் இன்னொரு தேதியில் கூட்டம் நடத்த மாநகராட்சி இடத்தை கேட்டு மாநகராட்சி ஆணையாளரிடமும், போலீஸ் அனுமதி கேட்டு சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரிடமும் மனு கொடுக்க வேண்டும். அந்த மனுவை மாநகராட்சி ஆணையாளர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் பரிசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அதுவரை கூட்டம் நடத்துவதற்காக போடப்பட்ட மேடை, விளம்பர பேனர்கள் ஆகியவை எந்த நிலையில் உள்ளதோ, அதே நிலையில் இருக்க உத்தரவிடப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து, புறநகர் பகுதியில் உள்ள தனியார் இடத்தில் கூட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாகவும், அந்த கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு மற்றும் ஒலிபெருக்கி அனுமதி அளிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் திமுக வழக்கறிஞர் நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.

இதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட எஸ்.பியின் அனுமதி கோரி மனு கொடுக்க வேண்டும் என்றும், அந்த மனுவை உடனடியாக பரிசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தூத்துக்குடி மீளவிட்டானில் தூத்துக்குடி இந்தக் கூட்டத்தை நடத்த திமுகவினர் முடிவு செய்தனர். அதன்படி மீளவிட்டான் கிராமம் அண்ணாதிடல் சீரமைக்கும் பணி நேற்று பிற்பகல் தொடங்கப்பட்டது.

இந்த இடத்தில் இன்று செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

தூத்துக்குடியில் மறியல்-ஜெயதுரை எம்.பி. உள்பட திமுகவினர் கைது:

திமுகவினர் தூத்துக்குடி முழுவதும் ஸ்டாலினை வரவேற்று வரவேற்பு பதாகைகள், டிஜிட்டல் பேனர்கள், அலங்கார வளைவுகள் வைத்துள்ளனர்.

ஆனால். தூத்துக்குடி தொகுதி எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை மற்றும் அவரது ஆதரவாளர்கள் அமைத்த பேனர்களுக்கு போலீஸ் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதுபற்றி ஜெயதுரை எம்.பி. தொண்டர்களுடன் தூத்துக்குடி தென்பாகம் மற்றும் வடபாகம் போலீஸ் நிலையத்துக்குச் சென்று நேற்று போலீசாருடன் விளக்கம் கேட்டார்.

பின்னர் போலீசை கண்டித்து தென்பாகம் போலீஸ் நிலையம் முன்பு ஜெயதுரை எம்.பி. தலைமையில் திமுகவினர் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து ஜெயதுரை எம்.பி. உள்ளிட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+