டெல்லியில் பாலியல் குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டன!
டெல்லி: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் விரைவு நீதிமன்றங்கல் டெல்லியில் செயல்படத் தொடங்கியுள்ளன
விரைவு நீதிமன்றங்கள்
டெல்லியில் சாகெத், துவாரகா, ரோகிணி, திஸ் ஹசாரி ஆகிய இடங்களில் விரைவு நீதிமன்றங்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், பலாத்கர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளிடம் விசாரணை நடத்த வேண்டிய தேவை இல்லை. அவர்களை எங்களிடம் ஒப்படையுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று பொதுமக்கள் அபாயகரமான முறையில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
எனவே, இந்த வழக்கை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருவதால் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும். ஒவ்வொரு சாமானிய மனிதனுக்கும் பின்னால் நீதித்துறை உள்ளது என்பதை நாம் வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பலாத்கார வழக்கு
டெல்லி சாக்தெத் விரைவு நீதிமன்றத்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வருகிறது. டெல்லியில் கடந்த டிசம்பர் 16-ந் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்த விரைவு நீதிமன்றத்தில் பலாத்கார சம்பவ வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. 30 பேர் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் இன்றே விசாரணை தொடங்குகிறது.
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என்று சாகெத் மாவட்ட பார் கவுன்சில் உறுப்பினர் சஞ்சய் குமார் தெரிவித்தார். குற்றச்சாட்டில் இருந்து அவர்களை பாதுகாக்க முயன்றால் அது தார்மீக நெறிமுறைகளுக்கு முரணானது என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications