மைனரைத் தான் முதலில் தூக்கிலிட வேண்டும்: கற்பழிக்கப்பட்டு இறந்த மாணவியின் தந்தை கோரிக்கை
டெல்லி: தனது மகளை சீரழித்தவர்களில் ஒருவரான மைனரைத் தான் (சிறுவன்) முதலில் தூக்கிலிட வேண்டும் என்று டெல்லியில் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு இறந்த மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தற்போது உள்ள கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைச் செய்து குற்றத்திற்கான தண்டனையை அதிகரிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. அந்த புதிய சட்டத்தில் மைனரின் வயது வரம்பை 12 முதல் 15 வயது வரை குறைக்க வேண்டும். எனது மகளை சீரழித்த 6 பேரில் 17 வயது சிறுவனும் அடக்கம்.
17 வயதிலேயே அவர் இத்தனை அக்கிரமங்களைச் செய்தால் பெரியவன் ஆனால் அவர் என்னவெல்லாம் செய்வாரோ? அவர் தான் என் மகளை இரக்கமின்றி கொடுமை படுத்தியுள்ளார். அதனால் அவரைத் தான் முதலில் தூக்கிலிட வேண்டும். எனவே அரசு அந்த சிறுவனுக்கு இரக்கம் காட்டமால் அவனையும் மற்ற 5 பேருடன் சேர்ந்து தூக்கிலிட வேண்டும். அவர்கள் அனைவரும் தெருவில் செல்லும் பெண்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்றார்.
17 வயது சிறுவன் தான் ஒரு மைனர் என்பதை நிரூபிக்க தனது மதிப்பெண் சான்றிதழை சமர்பித்துள்ளார். ஆனால் அவர் மைனர் தானா என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. பரிசோதனையில் அவர் மைனர் என்பது உறுதியானால் அவரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 3 ஆண்டுகள் அடைப்பார்கள் என்று சட்ட நிபுணர் ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் ஜாமீனிலும் வர முடியும்.












Click it and Unblock the Notifications