ஜெ.வை கடுமையாக விமர்சித்துப் பேசிய சம்பத் - வாபஸான வழக்குகள் குறித்து பரபரப்புத் தகவல்!

மதிமுகவில் கொள்கை விளக்க அணிச் செயலாளராக இருந்து வந்தவர் நாஞ்சில் சம்பத். இந்த நிலையில் அவருக்கும், வைகோவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. இது பெரிதாகி வெடித்தபோது நாஞ்சில் சம்பத் அதிமுகவுக்கு வந்து விட்டார். அவருக்கு துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியையும், இன்னோவா காரையும் பரிசாக கொடுத்தார் ஜெயலலிதா.
இந்த நிலையில் தற்போது நாஞ்சில் சம்பத் மீதான 3 அவதூறு வழக்குகளையும் வாபஸ் பெற்றுள்ளது அதிமுக அரசு. இந்த வழக்குகளை வாபஸ் பெறுவதற்கு அனுமதி கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் அரசு வழக்கறிஞர் ஜெகன் நேற்று மனு செய்தார்.
இந்த மூன்று வழக்குகளும் என்னென்ன என்ற விவரம் இதோ...
2002ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அதைக் கண்டித்து நாஞ்சில் சம்பத் பல்வேறு கூட்டங்களில் பேசினார்.
சென்னையில், 20.1.2003 மற்றும் 21.1.2003 ஆகிய தேதிகளில் சென்னை தம்பு செட்டி தெரு, வேப்பேரி தானாதெருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார். இதேபோல 17.4.2004 அன்று வில்லிவாக்கத்தில் நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியிலும் சம்பத் பேசினார். இந்த மூன்று கூட்டங்களிலும் முதல்வர் ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார் சம்பத்.
ஜெயலலிதாவை கடுமையாக கண்டித்ததோடு, சரமாரியாக விமர்சித்தும் பேசிய இந்த மூன்று வழக்குகளைத்தான் தற்போது அதிமுக அரசு திரும்பப் பெறுகிறது. ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துப் பேசிய சம்பத் மீதான வழக்குகளை அதிமுக அரசு வாபஸ் பெறுவது அதிமுகவினர் மத்தியிலேயே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications