ஸ்டாலின்தான்... சொல்லி விட்டார் கருணாநிதி, என்ன செய்யப் போகிறார் அழகிரி?
சென்னை: திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் என்பதை மீண்டும் ஒருமுறை திமுக தலைவர் கருணாநிதி மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கிறார். திமுகவில் அடுத்த தலைவர் யார் என்ற பட்டிமன்றமெல்லாம் இனி நடத்தத் தேவையில்லை என்பதாகவே கருணாநிதியின் பேச்சு அமைந்திருக்கிறது.
திமுகவைப் பொறுத்தவரையில் அண்ணாவுக்குப் பிறகு கருணாநிதியே தீர்மானிக்கக் கூடிய சக்தியாக உருவெடுத்திருக்கிறார். அண்ணா மறைவைத் தொடர்ந்து திமுகவில் சக்திவாய்ந்த தலைவராக எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். காலத்துக்குப் பிறகு 1990களில் வைகோ சக்தி வாய்ந்த தலைவராக உருவானார். ஆனால் அவரும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வைகோவுக்குப் பிறகு திமுகவில் கருணாநிதிக்குப் பிறகு மு.க.ஸ்டாலின்தான் என்ற நிலைமை உருவானது.
ஆனால் மதுரையை மையமாகக் கொண்டு செல்வாக்கு செலுத்தி வந்த கருணாநிதியின் மற்றொரு மகனான மு.க. அழகிரியோ, அண்ணன் நானிருக்க தம்பிக்க முடிசூட்டுவதா? என கொந்தளித்தார். இதனால் திமுக இப்போது மு.க.ஸ்டாலின், மு.க. அழகிரி அணியாக பிரிந்து கிடக்கிறது. மதுரை நகரில் மு.க.ஸ்டாலினின் எந்த ஒரு நிகழ்ச்சிக்குமே அழகிரி ஆதரவாளர்கள் போவதில்லை. இதற்கான கட்டப்பஞ்சாயத்து அவ்வப்போது அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றும் வருகிறது.
இந்த நிலையில் கருணாநிதி தமக்குப் பிறகு ஸ்டாலினே என்று மீண்டும அறிவித்திருக்கிறார்.

அடிக்கடி ஸ்டாலினை முன்னிறுத்தும் கருணாநிதி
சில மாதங்களுக்கு முன்பு ஐ.நா. சபையில் டெசோ மாநாட்டு தீர்மானங்களைக் கொடுத்துவிட்டு திரும்பிய மு.க.ஸ்டாலினுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் தமக்குப் பிறகு மு.க.ஸ்டாலின்தான் என்பதை கோட்டிட்டுக் காட்டிப் பேசினார் கருணாநிதி. அதைத் தொடர்ந்து இன்று வேலூர் பாமகவினர் தம்மை திமுகவில் இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சியில் பேசும்போதும் தமக்குப் பின்னால் ஸ்டாலின் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

கருணாநிதி பேச்சுக்கு செம ரெஸ்பான்ஸ்
இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற "இணையும் விழா" நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி, சமுதாய எழுச்சிக்கு தமது ஆயுள் உள்ளவரை பாடுபடுவேன் என்று கூறியபோது அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது. இந்த சமுதாய பணிக்கு தமக்குப் பின்னால் மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்று கருணாநிதி கூறியபோது உற்சாக மிகுதியில் ஓவென கூச்சலிட்டு கரவொலி எழுப்பினர் புது திமுகவினர்.

அழகிரி என்ன செய்வார்?
ஸ்டாலின் மீது காட்டத்தில் இருக்கும் அழகிரி முன்பு ஒருமுறை, திமுக தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடுவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். தற்போது தொடர்ந்தும் ஸ்டாலினையே கருணாநிதி முன்னிறுத்துவதால் திமுக தலைவர் பதவிக்கான தேர்தலில் அழகிரி இறங்கினால் திமுகவுக்கு பெரும் சோதனையாகவே இருக்கும்.

தொண்டர்கள் என்ன செய்வர்?
என்னதான் அழகிரி ஆதரவாளர்கள் என்று கூறிக் கொண்டாலும் திமுக தலைவர் கருணாநிதியே கூறிவிட்ட பிறகு அதாவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் ஸ்டாலின் பக்கமே சாய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். ஸ்டாலின்தான் தலைவர் என்றாகிவிடும் நிலையில் அழகிரி முகாமில் ஆதரவாளர்கள் எண்ணிக்கை கணிசமாக குறையவே செய்யலாம்.












Click it and Unblock the Notifications