காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடாத மத்திய அரசு- சுப்ரீம் கோர்ட் 'சுளீர்'

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை டிசம்பர் 31-ந் தேதிக்குள் அரசிதழில் வெளியிடுவோம் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்திருந்தது. ஆனால் டிசம்பர் 31-ந் தேதிக்குள் அரசிதழில் நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியிடப்படவில்லை.
இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்திருந்தது. இந்நிலையில் காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி ஏன் அரசிதழில் வெளியிடவில்லை? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த மத்திய அரசு கர்நாடகா அரசு, அரசிதழில் வெளியிட எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. சட்ட அமைச்சகத்தின் பரிந்துரைகள் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.
கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்:
ஆனால் இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், நீதிமன்றத்தில் அரசிதழில் வெளியிட எதிர்ப்பு இல்லை என்று கூறிவிட்டு கர்நாடகா ஏன் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்தது. இதுபோன்ற வாதங்களையெல்லாம் நீதிமன்றத்தில் வைக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இங்கே காவிரி நதிநீர் ஆணையத்தின் தீர்ப்புக்கு சம்மதம் தெரிவித்துவிட்டு, வெளியே சென்று எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் அரசிதழில் வெளியிடுவது தொடர்பாக வரும் 31-ந் தேதிக்குள் முடிவெடுத்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் முன்னதாக ஜனவரி 11-ந் தேதி காவிரி கண்காணிப்புக் குழுவைக் கூட்டி தமிழம், கர்நாடகாவுக்கான நீரின் அளவை தீர்மானித்து அறிவிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இரு மாநில நீர் பற்றாக்குறை மற்றும் நீர் இருப்பு விவரங்களையும் வெளியிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications