14 வயதில் பிரசாரம்... மு.க.ஸ்டாலினின் 'திகுதிகு' திமுக பயணம்.. ஒரு ரீவிசிட்!
சென்னை: எத்தனை கால காத்திருப்பு... எத்தனை போராட்டங்கள்...எத்தனை இழுபறிகள்.. இதோ ஒரு வழியாக 'வசிஷ்டர்' வாயால் 'வாரிசு' உத்தரவைப் பெற்று விட்டார் மு.க.ஸ்டாலின்.
எனக்குப் பின்னால் மு.க.ஸ்டாலினுக்குத்தான் பொறுப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. இது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்ல முடியாது. மாறாக ஒருவித நிம்மதிப் பெருமூச்சைத்தான் ஏற்படுத்தியுள்ளது.
இத்தனை காலமாக யார் அடுத்த வாரிசு என்பதிலேயே குழப்பம் நிலவி வந்ததால் திமுகவினர் பெருமளவில் குழம்பிப் போயிருந்தனர். இப்போது ஒரு தெளிவு பிறந்துள்ளது. சரி மு.க.ஸ்டாலின் திமுகவின் உச்சகட்டத்திற்கு வர எப்படியெல்லாம் பயணித்தார்... ஒரு சின்ன ரவுண்டப்...

14 வயதில் பிரசாரம்
திமுகவுக்காக 14வயதிலேயே பிரசாரக் களத்தில் குதித்தவர் ஸ்டாலின். 1967ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவர் தீவிரப் பிரசாரம் செய்தார்.

20 வயதில் பொதுக்குழு உறுப்பினர்
20 வயதில் அதாவது 1973ம் ஆண்டு திமுக பொதுக்குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டார் ஸ்டாலின்.

தூக்கி விட்ட மிசா
ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதாகி சிறை செல்லும் வரை அவருக்குப் பெரிய பிரபலம் கிடைக்கவில்லை.ஆனால் மிசாவில் கைதாகி சிறைக்குப் போன பிறகுதான் அவர் பிரபலமாக தெரிய ஆரம்பித்தார். மிசா சட்டத்தில் கைதாகி சிறைக்குப் போன ஸ்டாலின் அங்கு தாக்கப்பட்டதாக பரவிய செய்திகள் அவரை லைம்லைட்டில் கொண்டு போய் நிறுத்தின.

முதல் தேர்தல் - முதல் தோல்வி
முதல் முறையாக 1984ம் ஆண்டு ஆயிரம் விளக்குத் தொகுதியில் சட்டசபைக்குப் போட்டியி்ட்டார் ஸ்டாலின். ஆனால் அதில் அவருக்குத் தோல்வியே கிடைத்தது. ஆனால் ஆயிரம் விளக்குத் தொகுதியின் உறுப்பினராக பின்னர் 4 முறை அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது வரலாறு.

முதல் எலக்டட் மேயர்
1996ம் ஆண்டு சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட்டார். வெற்றியும் பெற்றார். இதன் மூலம் சென்னை மாநகராட்சியின் முதல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது. மேயர் பதவியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார் ஸ்டாலின் என்பது சென்னைவாசிகள் இன்றளவும் சொல்லி வரும் ஒரு வார்த்தையாகும்.

1975 முதல் பலமுறை கைது
1975ம் ஆண்டு முதல் முறையாக மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஸ்டாலின் அதன் பின்னர் பலமுறை கைதாகி சிறைக்குப் போயுள்ளார்.

2003ல் முதல் பெரிய பதவி
நீண்ட காலமாகவே ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி தர வேண்டும், தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்தபோதிலும் கருணாநிதி எப்பதவியையும் தராமல் வைத்திருந்தார். ஆனால் 2003ம் ஆண்டு ஸ்டாலினை துணைப் பொதுச் செயலாளராக அறிவித்து அவரது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தினார்.

2008ல் பொருளாளர்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2008ம் ஆண்டு பொருளாளர் பதவியைக் கொடுத்தார் கருணாநிதி. எம்.ஜி.ஆர். வகித்த பதவி என்பதால் ஸ்டாலின்தான் அடுத்த திமுக தலைவர் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.

2009ல் துணை முதல்வர்
திமுகவினரை மேலும் குஷிப்படுத்தியது, 2009ம் ஆண்டு ஸ்டாலின் துணை முதல்வர் பதவியில் அமர்ந்தபோது. வெறுமனே அமைச்சர் என்று ஆக்காமல், துணை முதல்வர் என்ற பொறுப்புடன் அவரை அமைச்சர் பதவியில் அமர்த்தினார் கருணாநிதி. இது ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தது.

தலைவராவது எப்போ...?
இப்போது தனக்குப் பிறகு ஸ்டாலின்தான் என்று கருணாநிதி கூறியிருப்பது பல குழப்பங்களுக்குத் தெளிவு தருவது போல உள்ளது. தனக்குப் பின்னால் தலைவராகப் போவது ஸ்டாலின்தான் என்று கருணாநிதி கூறியிருப்பதாகவே அனைவரும் கருதுகின்றனர். அதேசமயம், இப்போதைக்கு தலைவர் பதவி ஸ்டாலினுக்குக் கிடையாது என்ற அர்த்தமும் இதில் அடங்கியிருப்பதாக சிலர் கூறுகிறார்கள்.
எது எப்படியோ, ஸ்டாலினின் பரபரப்பான, சவாலான திமுக பயணத்தில் இப்போது மேலும் ஒரு திருப்பம் வந்துள்ளது. இது அவரை எந்த இடத்திற்குக் கொண்டு போகப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications