புதுவை பலாத்காரம்: 8-ந் தேதி சட்டசபை முற்றுகை- திமுக! 9-ந் தேதி பந்த்- பாமக அறிவிப்பு!
புதுச்சேரி: பிளஸ் டு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி வரும் 8-ந் தேதி சட்டசபை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. இதேபோல் 9-ந் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்திருக்கிறது.
புதுச்சேரி அருகே பிளஸ் டு மாணவியை பேருந்து நடத்துநர் முத்து என்பவரும் அவரது நண்பரான பொறியியல் கல்லூரி மாணவரான வெங்கடாஜலபதியும் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்துக்கு நீதி கோரி இன்று 3-வது நாளாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இப்போராட்டத்தை தற்போது அரசியல் கட்சிகள் கையில் எடுத்திருக்கின்றன. தி.மு.க. மாநில அமைப்பாளர் எம்.ஏ.ஏஸ் சுப்பிரமணியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், மாணவி கற்பழிக்ப்பட்ட சம்பவத்தில் புதுவை போலீசார் முன்கூட்டியே உரிய நடவடிக்கை எடுக்கவில்லை இதை வன்மையாக கண்டிக்கிறோம் இந்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்காக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக மகளிர் விரைவு நீதிமன்றம் தொடங்கி 1 மாத காலத்திற்குள் விசாரணை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் இவற்றை வற்புறுத்தி வருகிற 8-ந்தேதி தி.மு.க. மகளிர்அணி சார்பில்புதுவை சட்டசபை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
இதேபோல் வரும் 9-ந் தேதியன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது. இது தொடர்பாக இன்று அனைத்து அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக சிஐடி போலீசார் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஆனால் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்தில்தான் சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications