ஏலத்திற்கு வரும் டயானாவின் அரிய புகைப்படம்..
லண்டன்: இதுவரை யாருமே பார்த்திராத' டயானாவின் டீன் ஏஜ் வயதில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று அமெரிக்காவில் ஏலத்திற்கு வருகின்றது. டயானாவுக்கு 18 வயதான போது, 1979-1980 ஆண்டுகளுக்கிடையே இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.
உலக அளவில் அதிக அளவில் புகைப்படம் எடுக்கப்பட்ட பெண் என்றால் அது இங்கிலாந்து இளவரசி டயானாவாகத்தான் இருக்க முடியும். அழகும், அரச பரம்பரையில் மண முடித்த பின்னரும் அனைவருடனும் பழகிய எளிமையும்தான் அவரது புகழுக்குக் காரணம். அவர் மரணமடைந்த பின்னரும் அவருடைய புகழ் சற்றும் குறையவில்லை.
இந்நிலையில், ‘இதுவரை யாருமே பார்த்திராத' டயானாவின் பிரத்யேக புகைப்படம் ஒன்று அமெரிக்காவில் ஏலத்திற்கு வருகின்றது.

அரிய புகைப்படம் ஏலம்
டயானா-சார்லஸ் காதல் அரும்புவதற்கு முன்னர், டயானாவுக்கு 18 வயதான போது, 1979-1980 ஆண்டுகளுக்கிடையே இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. அந்த புகைப்படத்தில், அடையாளம் தெரியாத ஒரு ஆண் நண்பருடன் டயானா, கட்டிலில் படுத்திருப்பது போலவும், அருகில் உள்ள ஜன்னலின் மீது ‘ஜானி வாக்கர்' விஸ்கி புட்டி உள்ளது போலவும் பதிவாகி உள்ளது.

வெளியிடாத பத்திரிக்கை
சார்லஸ்-டயானா நிச்சயதார்த்தத்திற்கு 2 நாள் கழித்து, புகைப்படக் கலைஞர் ஒருவர், இங்கிலாந்தின் பிரபல நாளிதழான ‘டெய்லி மிரர்' பத்திரிகைக்கு இந்த புகைப்படத்தை அனுப்பியுள்ளார். இதனை வெளியிட வேண்டாம் என இங்கிலாந்து அரண்மனை உத்தரவிட்டதற்கு இணங்கவோ அல்லது நமது நாட்டின் இளவரசர் திருமணம் செய்ய நிச்சயித்துள்ள பெண்ணின் கடந்தகாலம் பற்றி வெளியிட வேண்டாம் என்ற எண்ணத்திலோ அந்த பத்திரிகை இந்த புகைப்படத்தை வெளியிடவே இல்லை.

புதையலாய் கிடைத்த புகைப்படம்
80 சதுர அங்குளம் உள்ள அந்த புகைப்படத்தின் பின்னால், ‘பதிப்பிக்க வேண்டாம்' என்ற அடிக்குறிப்பும் எழுதி வைக்கப்பட்டிருந்தது. பழைய பேப்பர்களை சேகரிக்கும் நிறுவனம் ஒன்று, சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘டெய்லி மிரர்' பத்திரிகை அலுவலகத்தில் இருந்து பழைய அச்சுப் பிரதிகளையும், புகைப்படங்களையும் விலைக்கு வாங்கியது. இந்த பழங்கால புதையலில்தான் டயானாவின் ‘யாருமே பார்த்திராத புகைப்படம்' அந்த நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

ஏலத்திற்கு வருகிறது
இந்த புகைப்படத்தை அமெரிக்காவின் நியூ ஹேம்ஷைரில் உள்ள ஆர்.ஆர். ஏல நிறுவனம் விரைவில் ஏலம்விட தீர்மானித்துள்ளது. சாதாரண புகைப்படம் 450 பவுண்டுகள் வரை ஏலம் போகும். ஆனால் இந்த புகைப்படம் அதைவிட பலமடங்கு விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டயானா பற்றிய கிசு கிசு
இளவரசர் சார்லசின் மனைவியான டயானா, அவரது கணவர் சார்லசை 1996-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி விவாகரத்து செய்தார். இத்தம்பதியருக்கு வில்லியம் ஆர்தர் பிலிப் லூயிஸ், ஹென்றி சார்லஸ் ஆல்பர்ட் டேவிட் என்ற பெயரில் இரண்டு மகன்கள் உள்ளனர். விவகாரத்துக்குப் பின்னர் பல்வேறு ஆண் நண்பர்களுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட டயானாவின் பின்னால், எப்போதுமே பத்திரிகை நிருபர்கள் விரட்டி, விரட்டி படையெடுத்து சென்றனர்.

சுவாரஸ்யமான செய்திகள்
1997-ம் ஆண்டு, பாரிஸ் நகரில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில், தனது ஆண் நண்பர் டோடி பயீத்துடன் டயானா காரில் சென்றுக்கொண்டிருந்போது ஏற்பட்ட பயங்கர விபத்தில் டயானா பரிதாபமாக பலியாகினார். 6-9-1997 அன்று டயானாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. டயானா மரணமடைந்த பின்னரும், அவரைப் பற்றிய வதந்திகளும் சர்ச்சைகளும் சர்வதேச ஊடகங்களின் சுவாரஸ்யமான செய்திகளாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications