திருவள்ளுவர் தினம்: நெல்லையில் தடையை மீறி மதுவிற்ற 13 பேர் கைது
நெல்லை: திருவள்ளுவர் தினத்தன்று நெல்லையில் மது விற்பனை செய்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் அன்று மது விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. கரிநாள் என்பதால் முந்தைய நாளே சிலர் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார்சிங் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ராஜராஜன், கூடுதல் துணை கமிஷனர் சேவியர் ஆகியோர்தலைமையில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது டவுன் மார்க்கெட், தச்சநல்லூர், புதிய பஸ் நிலையம், சந்திப்பு ஆகிய பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த முத்தையா, பாலமுருகன், சேகர், ஆறுமுகம், சுடலைகண்ணு, குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 65 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதே போல் தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரத்தில் பெட்டிக்கடையில் மது விற்ற வெள்ளத்துரை, நாங்குநேரி ரயில் நிலையம் அருகில் மதுவிற்ற மறுகால்குறிச்சி வடக்கு தெருவைச் சேர்ந்த நம்பிராஜன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ராதாபுரத்தில் 53 பாட்டில்களும், தென்காசியில் 10, பணகுடியில் 14, சங்கரன்கோவிலில் 1 மதுபாட்டிலும் பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications