இந்தியாவின் வாரிசு அரசியல்: காஷ்மீர் தொடங்கி தமிழ்நாடு வரை…. ஓர் அலசல்
சென்னை: இந்திய ஊடகங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக அடிபடும் செய்தி காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டதுதான். இதனை காங்கிரசார் உற்சாகப் பெருக்கில் கொண்டாடிக் கொண்டிருக்க, எதிர்கட்சியில் இருப்பவர்களோ ராகுல் காந்திக்கு போட்டியாக யாரை களம் இறக்குவது? யாராக இருந்தால் சரியாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியில் வாரிசுகள் தலைவராவது ஒன்றும் புதிய விசயமில்லை. நேருவுக்குப் பின் இந்திராகாந்தி, அவருக்குப் பின் ராஜீவ் காந்தி என மக்கள் ஏற்றுக்கொண்டனர். ராஜீவின் மரணத்திற்கு பின் சோனியாவை தலைவியாக ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் கட்சியினர் இப்போது ராகுல் காந்தியை துணை தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் மன்னராட்சி மறைந்து ஜனநாயகம் மலர்ந்தும் வாரிசுகளை முன்மொழிவது மட்டும் மாறவே இல்லை. மத்தியில் மட்டுமல்ல மாநில அரசியலிலும் வாரிசுகள் அரசியலில் அடி எடுத்து வைத்து வெற்றி பெற்று வந்துள்ளனர். காஷ்மீர் தொடங்கி தமிழகம் வரை அரசியலில் களம் இறங்கியுள்ள வாரிசுகளைப் பற்றி ஓர் அலசல்.

காஷ்மீர்: அப்துல்லா வாரிசுகள்
காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை மன்னர் காலம் அப்படியே தொடர்கிறது என்றே கூறலாம். ஷேக் அப்துல்லாவைத் தொடர்ந்து அவரது மகன் பரூக் அப்துல்லா தலைவரானார் பின்னர் முதல்வரானார். பரூக் அப்துல்லா தேசிய அரசியலை விரும்பியதால் மாநில அரசியலை மகனுக்கு கொடுத்துவிட்டு தேசிய அரசியலில் ஐக்கியமாகி தற்போது மத்திய அமைச்சராக உள்ளார். இதனால் மூன்றாவது தலைமுறை வாரிசான உமர் அப்துல்லா தற்போது காஷ்மீர் மாநில முதல்வராக உள்ளார்.

பீகார்: முதல்வரான லாலு மனைவி
பீகார் மாநிலத்தை தாண்டி தேசிய அரசியலிலும் அடியெடுத்து வைத்த லாலு, சிறைக்கு போக வேண்டிய நேரம் வந்ததை அடுத்து கையெழுத்து மட்டுமே போடத்தெரிந்த தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வர் பதவியில் அமர வைத்தார். மனைவியைத் தொடர்ந்து, அவரது மைத்துனர் உட்பட பல உறவினர்களும் அரசியலில் களமிறக்கப்பட்டனர். வாரிசு அரசியலின் ஆட்டம் காரணமாகவே பீகாரில் ஆட்சி பீடத்தை இழந்தது வேறுகதை.

உ.பி: முலாயம் சிங் மகன் அகிலேஷ்
சாமான்ய மக்களின் கட்சி என்று தொடங்கப்பட்ட முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியிலும் வாரிசு அரசியல்தான் நிலவுகிறது. சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் முக்கியப் பங்கு வகித்தார். உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி மகத்தான வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வர் பதவியை தனது மகன் அகிலேசுக்கு வழங்கினார் முலாயம் சிங்.

மகாராஷ்டிரா: பால் தாக்கரே டூ உத்தவ் தாக்கரே
சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே தனக்குப் பின் தனது வாரிசான உத்தவ் தாக்கரே கட்சியை கவனித்துக் கொள்வார் என்று ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்ததுடன், கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் எழுதிய கட்டுரையிலும் குறிப்பிட்டிருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து அவரது இளைய மகன் உத்தவ் தாக்கரே கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

ஒடிஸா: பிஜு பட்நாயக் டூ நவீன் பட்நாயக்
ஒரிஸா ( இப்போது ஒடிஸா)வில் முதலமைச்சராக இருந்த பிஜூ பட்நாயக்கைத் தொடர்ந்து அவரது மகன் நவீன் பட்நாயக்கும் அம்மாநில முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இரண்டு முறை ஒரிஸாவின் முதலமைச்சராக இருந்த பிஜூ பட்நாயக் 1997இல் இறந்தவுடன், அதுவரையிலும் அரசியல் எதிலும் ஈடுபடாமல் அமெரிக்காவில் இருந்த, அவரது இளைய மகன் நவீன் பட்நாயக் திடீரென்று அரசியலில் களம் இறங்கினார். மக்களால் எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பின்னர் 1998இல் அவர் பிஜூ ஜனதா தளத்தை ஆரம்பித்தபோது, ஒரிஸாவின் ஜனதா தளக் கட்சியினரும், மக்களும் அவரை உடனே ஏற்றுக்கொண்டனர்.

ஆந்திரா: என்.டி.ஆர் டூ சந்திரபாபு நாயுடு
ஆந்திரா மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியை ஆரம்பித்து முடிசூடா மன்னராக விளங்கிய என்.டி.ஆர் உயிரோடு இருக்கும் போதே வாரிசு அரசியல் தலை தூக்கியது. அவர் லட்சுமி சிவபார்வதியை இரண்டாவது திருமணம் செய்ததை அடுத்து அதனை பிடிக்காத என்.டி.ஆரின் மருமகன் சந்திரபாபு நாயுடு கட்சியை உடைத்து தன்னை முன்னிலைப்படுத்தி ஆட்சியையும் கைப்பற்றி காட்டினார்.

ஒய்.எஸ்.ஆர் வாரிசு ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திராவின் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டியின் திடீர் மறைவுக்குப் பிறகு அவரது மகன் ஜெகன் மோகன் ஒதுக்கப்பட்டார். ரோசய்யா முதல்வராக அறிவிக்கப்படவே எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனிக்கட்சி தொடங்கினார் ஜெகன். இடைத்தேர்தலில் பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து தனது அரசியல் பலத்தையும் நிரூபித்து இருக்கிறார்.

சந்திரபாபு நாயுடு வாரிசு லோகேஷ்
என்.டி.ராமராவின் மகன் பாலகிருஷ்ணா மகள் புரந்தேஸ்வரி ஆகியோர் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளனர். மகள் தற்போது மத்திய இணை அமைச்சராக அமைச்சராகவும் இருக்கிறார். இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர், சந்திரபாபு நாயுடுவின் மகன், நர லோகேஷ், 30,அரசியலில் இறங்க உள்ளார். 2014ல் நடக்க உள்ள, லோக்சபா தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இவரை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது இனிதான் தெரியும்.

கர்நாடகா: தேவகவுடா டூ குமாரசாமி
முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தள கட்சித்தலைவருமான தேவகவுடாவின் மகன்கள் கர்நாடக அரசியலில் கால் பதித்துள்ளனர். தேசிய அரசியலில் தேவகவுடா கவனம் செலுத்தவே அவரது மகன் குமாரசாமி மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு கட்சித் தலைவராகவும் கர்நாடக மாநிலத்தின் முதல்வராகவும் பதவியேற்றார்.

தமிழ்நாடு: கருணாநிதி டூ ஸ்டாலின்
அறிஞர் அண்ணாவின் மரணத்திற்குப் பின்னர் எழுந்த போட்டியில் கருணாநிதி முதல்வரானார். திமுக தொண்டர்களை சிதறாமல் அரவணைத்துக் கட்சியை வளர்த்த கருணாநிதி தனக்குப் பின்னர் தன் குடும்பத்தினர்தான் கட்சியை கைப்பற்றவேண்டும் என்பதில் கவனமாக காய் நகர்த்தினார். இரண்டாம் கட்டத்தில் தலைதூக்கிய யாரையும் வளரவிடாமல் செய்த கருணாநிதி கட்சியே உடைந்தாலும் கவனமாக செயல்பட்டார்.
கருணாநிதிக்குப் பிறகு திமுகவில் யார் என்ற பேச்சு அவ்வப்போது எழுந்தாலும், ஸ்டாலினை சூசகமாக முன்னிலைப்படுத்தி வந்தார். எனினும் மு.க. அழகிரி, கனிமொழி ஆகியோருக்கும் அரசியல் பொறுப்புகள் வழங்கப்பட்டன. சமீபத்தில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு பேசிய கருணாநிதி, வாய்ப்பு கிடைத்தால் மு.க. ஸ்டாலினை தலைவர் பதவிக்கு முன்மொழிவேன் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஜி.கே. மூப்பனார் டூ ஜி.கே. வாசன்
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய ஜி.கே. மூப்பனாரின் அரசியல் வாரிசாகவே அவரது மகன் ஜி.கே. வாசன் திகழ்கிறார். ஆகஸ்ட் 2001ல் தமாக தலைவர் ஜி. கே. மூப்பனார் மரணத்திற்குப் பின்னர் அக்கட்சியில் மக்களிடையே நன்கு அறிமுகமான பல இரண்டாம் கட்டத் தலைவர்கள் இருந்தபோதும், அவர்களை எல்லாம் தலைவராக ஆக்காமல், மூப்பனாரால் முன்னிறுத்தப்படாத, மக்களுக்கு அதிகம் தெரியாத ஜி. கே. வாசனைத்தான் தமாக தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். அதனை அக்கட்சியின் தொண்டர்களும், பிற தலைவர்களும் எவ்விதக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொண்டார்கள். இன்றைக்கு காங்கிரசுடன் கட்சியை இணைத்து அவரும் மத்திய அமைச்சராகிவிட்டார்.

பாமக ராமதாஸ் டூ அன்புமணி
உழைக்கும் மக்களான பாட்டாளிகளின் கட்சி என்று ராமதாஸ் தொடங்கிய பாமக அதிரடியாக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என அரசியலில் புகுந்தது. எவ்வளவு வேகமாக வளர்ந்தோ, அதே வேகத்தோடு கரைந்தது. பாமகவில் ராமதாஸுக்குப் பின்னர் அடுத்த தலைவர் யார் என நேரடியாக அறிவிக்கப்படவில்லை எனினும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ்தான் முன்னிலைப் படுத்தப்படுகிறார்.

இவர்களும் வாரிசுகள்தான்
காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட், மாதவராவ் சிந்தியா மகன் ஜோதிராதித்ய சிந்தியா, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித் ஆகியோரும் வாரிசு அரசியலுக்கு ஆதாரமாக விளங்குகின்றனர்.

வாரிசுகளுக்கு ஏன் முக்கியத்துவம்
அரசியலில் மட்டுமில்லை இன்றைக்கு திரையுலகம், வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றில் முதன்மை ஸ்தானத்தில் இருப்பவர்களின் பிள்ளைகளை, அந்த அமைப்புகளில் பணிபுரிபவர்கள் எவ்வளவு மரியாதையுடன் நடத்துகிறார்களோ, அதே போன்றதொரு மரியாதை, ஏற்கனவே தலைவரின் பிள்ளை மீது கட்சியினருக்கு இருந்து வருகிறது. அம்மாதிரியான சூழ்நிலையில், தனது சக இரண்டாம் கட்டத் தலைவர் யாரும் தலைவராகக்கூடாது என்று அனைவரும் விரும்பும்போது, இவர்களுக்கு சரியான சாய்ஸ் குடும்ப வாரிசுதான்.

வாரிசுகள் ஜெயிப்பார்களா
நாம் ஆதி காலம் முதல் மரபு வழியிலான குடும்ப அமைப்பில் இருந்து வருபவர்கள். எனவேதான் இந்திராகாந்தி காலத்திலிருந்தே வாரிசு என்பதற்காக மக்கள் ஒருவரைப் புறக்கணித்ததே இல்லை. வாரிசுகளின் செயல்பாடுகள் பிடிக்காமல் நமது மக்கள் அவர்களைத் தோற்கடித்திருக்கலாமே ஒழிய, வாரிசுகள் என்ற காரணத்திற்காக மக்கள் அவர்களைப் புறக்கணித்ததில்லை.
இதுவரை அரசியலில் வாரிசுகள் ஜெயித்திருக்கலாம். ஆனால் இனிவரும் காலங்களில் அரசியல்வாரிசுகள் ஜெயிப்பார்களா? என்பதை காலம்தான் பதில்சொல்லவேண்டும்.












Click it and Unblock the Notifications