டெல்லி பாலியல் பலாத்கார வழக்கை கோவைக்கு மாற்றக் கோரும் குற்றவாளியின் வக்கீல்!
டெல்லி: டெல்லியை உலுக்கிய பாலியல் பலாத்கார வழக்கை டெல்லியிலிருந்து கோவைக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார் குற்றவாளிகளில் ஒருவரது வக்கீல் எம்.எல்.சர்மா.
டெல்லியில் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பஸ்சில் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த மாணவியின் வழக்கில் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் சிறுவன் தவிர மற்ற ஐந்து பேர் மீதும் டெல்லி விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐந்து குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங்குக்கு ஆதரவாக வாதாட எம்.எல்.சர்மா என்ற வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் வழக்கை டெல்லியில் நடத்த விரும்பவில்லை. வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரியுள்ளார்.
குறிப்பாக அவர் தேர்ந்தெடுத்துள்ள நகரம் தமிழகத்தின் கோவையாகும். இதுதொடர்பாக அவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனு மீது இன்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்கவுள்ளனர். டெல்லியிலிருந்து வழக்கை மாற்ற சர்மா கோருவதன் காரணம் இவைதான்...

மக்களின் ஆக்ரோஷம் வழக்கை பாதிக்கும்
கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு எதிராக டெல்லி மக்களிடம் ஏற்பட்டுள்ள ஆக்ரோஷம், தன் தரப்பு வாதத்தை முடக்கி விடக்கூடும் என்று வக்கீல் எம்.எல்.சர்மா கருதுகிறார்.

கோவை அல்லது மதுரா
கோவை அல்லது உ.பி. மாநிலம் மதுரா கோர்ட்டுக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்பது சர்மாவின் கோரிக்கையாகும்.

ஏன் கோவை...?
கோவையைத் தேர்ந்தெடுத்தது குறித்து சர்மா கூறுகையில், மாணவி கற்பழிப்பு வழக்கு விசாரணையை டெல்லியில் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்த முடியாது. டெல்லி மக்களின் மன உணர்வுக்கு ஏற்ப தீர்ப்பு அமைந்து விட கூடிய சூழலே உள்ளது. எனவே இந்த வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டியது அவசியமாகும்.

அமைதியான நகரம் கோவை
மாணவி கற்பழிப்பு வழக்கின் விசாரணையை கோவை கோர்ட்டில் நடத்த நான் விரும்புகிறேன். அந்த நகரத்தைத்தான் எனது முதல் வாய்ப்பாக கருதுகிறேன்.
ஏனென்றால் கோவை மாநகரமானது அமைதியான நகரம்.

சென்னை சரிவராது
சென்னையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நடத்த நான் விரும்பவில்லை. ஏனென்றால் சென்னை மக்கள் ஏற்கனவே என் கட்சிக்காரர்கள் மீது கடுங் கோபத்தை காட்டி உள்ளனர்.
இந்த சமயத்தில் வழக்கு தொடர்பான விசாரணையை அங்கு நடத்தினால் அவர்கள் மீண்டும் என் கட்சிக்காரர்கள் மீது கோபத்தை காட்ட நேரிடலாம். அது இந்த வழக்கில் என்னால் சுதந்திரமாக வாதாடும் சூழ்நிலையை தடுக்கும்.

கோவையில் சுயமாக வாதிட முடியும்
கோவை கோர்ட்டில் நடத்தினால் நான் சுயமாக வாதாட முடியும் என கருதுகிறேன். கோவை மக்கள் தங்கள் சொந்த வேலைகளில் கவனம் செலுத்துபவர்கள். தங்கள் எதிர்ப்பை காட்டுவதற்காக கோர்ட்டு வழக்கு விசாரணைகளில் தலையிடமாட்டார்கள். அவர்கள் அமைதிக்கு நற்பெயர் பெற்றவர்கள்.

கோவை மக்கள் பக்திமயமானவர்கள்
கோவை மக்கள் ஆக்ரோஷத்தால் உந்தப்பட்டு வீதிகளில் இறங்கி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் பழக்கமுடையவர்கள் இல்லை. இங்கு நிறைய கோவில்கள் உள்ளன. மக்கள் பக்தி உள்ளவர்கள். அரசியல் ரீதியான சிபாரிசுகள் இங்கு இருக்காது என நான் நம்புகிறேன்.

கோவையே பாதுகாப்பானது
எனவேதான் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நடத்த நான் கோவையை தேர்வு செய்தேன். இதற்காக நான் இந்த பகுதியில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் தன்மை குறித்து ஆய்வு செய்தேன். அதன்பிறகே என் கட்சிக்காரர்களுக்கு மிகவும் பாதுகாப்பான பகுதியாக இருக்கும் என கருதியே கோவையை தேர்ந்தெடுத்தேன்.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 6 பேருக்கும் அதிக பட்ச தண்டனையிலிருந்து விடுபட்டு குறைவான தண்டனையை பெற்று தர முடியும் என நம்புகிறேன். என் கட்சிக்காரர்களுக்கு தெளிவான மற்றும் விடுதலையளிக்கும் நீதி தேவை என்கிறார் சர்மா.

கோவையும் கொந்தளித்துள்ளதே...
ஆனால் கோவையும் அநீதிகளுக்கு எதிராக கொந்தளித்த வரலாறும் உண்டு. பள்ளி மாணவ- மாணவி முஸ்கின்- ரித்திக் கொலை வழக்கில் மனோகரன் என்பவருக்கு மகிளா கோர்ட் தூக்கு தண்டனை விதித்தது. இந்த வழக்கில் இன்னொரு குற்றவாளியை போலீஸார் என்கவுண்டரில் போட்டுத் தள்ளியது நினைவிருக்கலாம். அதேபோல பொள்ளாச்சி அருகே 17 வயது பெண் கற்பழிப்பு வழக்கிலும் கோவை கோர்ட் ஆறுமுகம் என்பவருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்தது.

சுற்றி வளைத்து தாக்கினர்
முஸ்கின்- ரித்திக் கொலை குற்றவாளிகளை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது மக்கள் சுற்றி வளைத்து தங்கள் எதிர்ப்பை கடுமையாக காட்டினார்கள்.

டெல்லி பயங்கரத்திற்கும் கடும் எதிர்ப்பு
தற்போது டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவத்தை தொடர்ந்து கோவையிலும் போராட்டம் நடந்தது. கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கோவை நீதிமன்ற வக்கீல் சங்கத்தை சேர்ந்த பெண்கள் பொதுமக்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். டெல்லி மாணவி சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றபோது கோவையை சேர்ந்த பல சமூக சேவை நிறுவனங்கள் இரங்கல் கூட்டமும், மெழுகுவர்த்தி அஞ்சலியும் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒத்துழைக்க மாட்டோம்- கோவை வக்கீல்கள்
இந்த நிலையில் டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கை கோவைக்கு மாற்றுவதை அங்குள்ள வக்கீல்கள் விரும்பவில்லை. இதுகுறித்து கோவை மூத்த வக்கீல் ஒருவர் கூறுகையில், மாணவி கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக நாங்கள் யாரும் செயல்படமாட்டோம். வக்கீல் சர்மாவுக்கும் ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம் என்றார்.
பார்க்கலாம், சர்மாவின் கோரிக்கை நிறைவேறுமா என்பதை...!












Click it and Unblock the Notifications