Palani land scam: விரிவடையும் விசாரணை வளையம்.. HR&CE பக்கம் திரும்பிய CBCID! இதுவரை யாரும் கைதாகாதது ஏன்?
திண்டுக்கல்: பழனி முருகன் கோயில் நில மோசடி விவகாரத்தில், முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, சிபிசிஐடி அலுவலகத்திற்கு விசாரணைக்காக பழனி கோவில் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் வருவாய்த் துறை சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆஜராகியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து 6-வது நாளாகக் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே பழனி சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை மற்றும் தீவிர விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று பழனி கோவில் நில மோசடி வழக்கு தொடர்பாக திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் 6வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
பழனி கோவில் நில மோசடி
இன்றைய விசாரணைக்காக பழனி கோவில் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து, மற்றும் ஓய்வு பெற்ற தாசில்தார் மாரியப்பன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சின்னசாமி, வருவாய் ஆய்வாளர் சிவனேசன் ஆகியோரிடம், சிபிசிஐடி எஸ்பி ஷாஜிதா, மற்றும் டிஎஸ்பி அஜய் தங்கம் உள்ளிட்டோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முருகதாஸ்
ஏற்கனவே பத்திரப்பதிவு துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் நிலத்தை விற்றதாக சொல்லப்படும் முருகதாஸ், நிலத்தை வாங்கியதாக சொல்லப்படும் சேதுபதி, வெள்ளத்துரை குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. விழுப்புரத்தில் முருகதாஸ் வீட்டுக்கும் போலீசார் சீல் வைத்தனர். பின்பு அந்த சீல் அகற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே வழக்கில் தொடர்புடைய வெள்ளத்துரை, சேதுபதி, முருகதாஸ் ஆகியோர் தலைமறைவாகி இருக்கின்றனர்.
சிபி சிஐடி
நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமின் பெற்றிருக்கிறார். இதுவரை சிபி சிஐடி போலீசார் கைது நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிபிசிஐடி விவகாரம் ஒருபுறம் இருக்க தனியே பத்திரப்பதிவு துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. பத்திர பதிவுத்துறை சார்பில் மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் நேற்று பழனி சார் பதிவாளர் அலுவலகத்தில் அந்த குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இதனால் நேற்று பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை
இந்த நிலையில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பக்கம் விசாரணை திரும்பி இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விசாரணையில் பழனி கோவில் நிலம் எவ்வாறு பதிவு செய்யப்பட்டது, அதற்கான அனுமதி நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதார், விதிகள் முறையாக பத்திரப்பதிவு அதிகாரிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டத? என சிபிசிஐடி போலீசார் விளக்கம் பெற்றதாக சொல்லப்படுகிறது.
மாரிமுத்து
இது மட்டுமல்லாமல் நிலப்பதிவு நடைமுறை கோவில் நிர்வாக அனுமதிகள், நில விற்பனை தொடர்பான ஆவணங்கள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் மாரிமுத்துவிடம் விளக்கம் கேட்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைதாகாதது ஏன்?
தலைமுறைவாக உள்ள சில முக்கிய நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிபிசிஐடி வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவலின் படி, தற்போதைக்கு கைது நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பில்லை. முறையாக அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் கைது நடவடிக்கை இருக்கும் எனவும், அரசியல் தொடர்புகள் இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருவதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications
