பொய்த்துப்போன பருவமழை… நிவாரணம் கேட்கும் நெல்லை விவசாயிகள்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பருவமழை பொய்த்துப் போனதால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கண்ணீரில் ஆழ்ந்துள்ளனர்.
குறிப்பிட்ட காலத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யாமல் பொய்த்ததால் பல பகுதிகளில் குளங்கள், ஆறுகள், ஏரிகள் தண்ணீரின்றி வற்றிவிட்டன. இதனால் சாகுபடி செய்யாமல் நிலத்தை தரிசாக போட்டுவிட்டனர்.
செங்கோட்டை, புளியரை, பண்பொழி, குற்றாலம், பணகுடி மற்றும் ரோஸ்மியாபுரம் பகுதிகளில் கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் நெல் பயிர்கள் பயிரிட்டிருந்தனர். ஆனால் போதிய மழை பெய்யும் என நம்பி பயிர்செய்த விவசாயிகள் பம்பு செட் கிணற்றில் உள்ள நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வந்ததால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

கருகும் நெற்பயிர்கள்
விவசாயிகள் நீண்ட கால பயிர்களான வாழை பயிரை காப்பாற்றுவதற்காக குறுகிய கால பயிரான நெல்லிற்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆகையால் பல ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்த நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகத் தொடங்கின. இதனால் பயிர்களைக் காக்க பலவிதங்களில் போராடி வருகின்றனர் விவசாயிகள்.

விலை கொடுத்து வாங்கும் தண்ணீர்
பம்ப் செட் கிணறுகளில் போதிய தண்ணீர் இல்லாததால் கருகும் பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் சிலர் அதிக தொலைவில் உள்ள வேறு பம்ப்செட் கிணற்றிலிருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி டேங்கர் லாரிகள் மூலம் தங்கள் வயலுக்கு பாய்ச்சி வந்தனர்.

நெல்லையில் வாட்டும் குளிர்
நெல்லை மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக நெல்லை மேற்கு மாவட்ட பகுதிகளான ஆலங்குளம், மாறாந்தை, பாவூர்சத்திரம், கீழப்பாவூர், தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, புளியரை போன்ற பகுதிகளில் உள்ள வேப்ப மரங்கள் கருகிய நிலையில் காணப்படுகிறது.

கால்நடைகளுக்கு தீவனமில்லை
புற்கள் கருகிவிட்டதால் கால்நடைகளுக்கு உரிய தீவனம் கிடைக்காமல் பால் உற்பத்தியும் கணிசமாக குறைந்து வருகிறது. புளியரை பகுதியில் சுமார் 500ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகியுள்ளது,மேலும் பல நூறுஏக்கர் நெற்பயிர்கள் மழைபெய்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் சூழலும் உள்ளது. இதனால் பிழைப்புத் தேடி விவசாயிகள் அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

உரிய நிவாரணம் தேவை
பல ஆயிரம் செலவு செய்து சாகுபடி செய்தும் பயிர்கள் கருகிவருவதால் உரிய நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராடி வருகின்றனர். தமிழக அரசு ஏக்கருக்கு ரூ. 25000மும், தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு இடம் பெயரும் விவசாயிகளுக்கு ரூ.10000மும் வழங்கவேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை.












Click it and Unblock the Notifications