விமான நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்ட நாடார்கள் திடீர் எதிர்ப்பு
சென்னை: சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தின் விரிவாக்கப் பகுதிக்கு மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் பெயரைச் சூட்டினால் அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தப் போவதாக நாடார் அமைப்பினர் திடீரென அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து நாடார் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் என்.ஆர். தனபாலன் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சென்னையில் உள்நாட்டு விமான முனையம் காமராஜர் பெயரிலும் பன்னாட்டு விமான முனையம் அண்ணா பெயரிலும் செயல்படுகிறது. தற்போது உள்நாட்டு விமான முனையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்ட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதை பரிசீலிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டால் ஏற்கனவே உள்ள காமராஜர் பெயர் காலப்போக்கில் மறைக்கப்படும். உள்நாட்டு விமான முனையத்துக்கு இரண்டு பெயரை சூட்டுவது பல்வேறு நடைமுறை குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, எம்.ஜி.ஆர் பெயரை உள்நாட்டு முனையத்துக்கு சூட்டக்கூடாது. இதையும் மீறி சென்னை உள்நாட்டு விமான முனையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் வைக்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும்.
கொல்கத்தா, மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் உள்ள விமான நிலையங்கள் விரிவாக்கப்பட்ட போது, அவற்றுக்கு கூடுதல் பெயர் சூட்டப்படவில்லை. ஸ்ரீபெரும்புதூர் அல்லது வேறு இடங்களில் உருவாக்கப்படும் விமான நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டலாம்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் வாசன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அவர்களும், எங்களுக்கு ஆதரவு தருவதாக உறுதியளித்துள்ளனர் என்றனர்.
இந்தப் பிரச்சினைக்கு சரத்குமாரை விட்டு முதல்வர் ஜெயலலிதா பதிலடி தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications