டாஸ்மாக்கில் சிக்கித் தவிக்கும் இளம் தலைமுறை!
திருப்பூர்: தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மட்டுமில்லாமல் அதன் வருவாயும் அதிகரித்துள்ளது. டாஸ்மாக் கடைகளின் ஆண்டு சராசரி வருமானம் 18 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரித்து தற்போது 18 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.
2003-04ம் ஆண்டு டாஸ்மாக் மூலம் அரசே சில்லறை விற்பனையில் ஈடுபட்டபோது ஆண்டில் 139.57 லட்சம் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் கிடைத்த வருவாய் 3639.93 கோடி ரூபாய். ஆனால் கடந்த நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 536.35 லட்சம் பெட்டியாக அதிகரித்துள்ளது. ஆனால் நடப்பு ஆண்டு முடிவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள சூழலில் தமிழகத்தில் மதுபான விற்பனை மற்றும் கலால் வரியாக ரூ.23,500 கோடி வருமானத்துடன் முதலிடத்தை பெற்றுள்ளது.
தமிழகம் மற்ற தென் மாநிலங்களை பின்னுக்கு தள்ளி இதில் மட்டும் பல மடங்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. கல்வியிலோ, மற்ற துறைகளிலோ இந்த அளவுக்கு சாதனை இல்லை. படித்து சாதிக்காததை குடித்து சாதிக்கின்றனர் இன்றைய இளம் தலைமுறையினர்.

அதிரவைக்கும் ஆய்வு
குளோபல் சர்வே என்ற ஆய்வு மையம் நாடு முழுவதும் ‘குடிமகன்கள்‘ குறித்த ஆய்வை மேற்கொண்டது. மது குடிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பவர்களை மது குடிக்கும் நோய் பீடித்துள்ளது என்று தான் கருதவேண்டியுள்ளதாகவும் அந்த அமைப்பு தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு நம்பர் 2
தமிழ்நாட்டில் 16 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாகியிருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவல், தமிழகத்தில் தற்போது மது குடிப்பவனின் சராசரி வயது 13 என்பதுதான். இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்திரபிரதேசத்தில் 21 சதவீதத்தினர் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர் என்று தெரியவந்தது.

அதிகரிக்கும் வாகன விபத்துக்கள்
சமீப ஆண்டுகளாக தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் கடந்த ஆண்டில் மட்டும் 16 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 60 சதவீத விபத்துகளுக்கு ஏதாவது ஒரு வகையில் மது குடிப்பதே காரணமாக அமைந்துள்ளதாக அரசு தரப்பிலேயே ஒப்பு கொள்ளப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் ஏற்படும் 65 சதவீத கொலைகளுக்கும் மதுவே காரணமாக உள்ளது.

வேறு வேலைக்கு செல்ல ஆர்வம்
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் எனப்படும் டாஸ்மாக் மூலம் கடந்த நவம்பர் 29, 2003ம் ஆண்டு முதல் மதுபான விற்பனையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் 6,823 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடைகளோடு இணைந்த 4,730 அனுமதி பெற்ற பார்கள் செயல்படுகிறது.

8 நாட்கள் மட்டுமே விடுமுறை
காந்தி ஜெயந்தி, திருவள்ளூவர் தினம், மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் பிறந்தநாள், வள்ளலார் நினைவு நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் மே தினம் ஆகிய 8 நாட்கள் மட்டுமே சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது. மற்றபடி சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாள் என்று எதுவும் இல்லை.

தற்காலிக பணியாளர்கள்
டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுவதற்காக 35 ஆயிரம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் இயற்கை மரணம், வேலை நீக்கம், தற்காலிக பணிநீக்கம் காரணமாக வேறு வேலை தேடி சென்றவர்கள் என 5 ஆயிரம் ஊழியர்கள் பணியில் இல்லை. நகரப்பகுதி கடைகளில் 4 பேர் வீதமும், கிராமப்புற கடைகளில் 2 பேர் வீதம் பணியாற்றி வருகின்றனர். இதில் மேற்பார்வையாளருக்கு ரூ.5,500 ஊதியமாகவும், விற்பனையாளருக்கு ரூ. 4,000 ஊதியமாகவும் வழங்கப்படுகிறது.

கேரளா நிலவரம்
கேரள மாநிலத்தில் அதிக கட்டணம் வசூல், போலி மதுபான விற்பனையை தடுக்க காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை மதுபான கடைகள் திறந்திருக்கும். தொழிலாளர் நல சட்டவிதிகளுக்கு உட்பட்டு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் உள்ளிட்ட எல்லா சலுகைகளும் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 12 மணிநேரம் வேலை செய்யும் இவர்களுக்கு 8 மணிநேரம் போக, கூடுதலான 4 மணிநேரத்துக்கு, ஒவ்வொரு மணிநேரத்துக்கும் மேற்பார்வையாளருக்கு ரூ.75ம், விற்பனையாளருக்கு ரூ.50 வழங்கப்படுகிறது. தவிர மதுபான கடை மேற்பார்வையாளருக்கு ரூ.22 ஆயிரமும், விற்பனையாளருக்கு ரூ. 17 ஆயிரமும் மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அதிக விலை
கேரள மாநிலத்தில் மதுபாட்டில்கள் எல்லாமே எம்.ஆர்.பி விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. அங்கு கணினி பில்தான். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு பாட்டிலுக்கு 5 முதல் 10 ரூபாய் வரை அதிக விலை கொடுத்தே வாங்க வேண்டியுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பார்க்கின்றனராம். இதனை விற்பனை பிரதிநிதிகள், மேற்பார்வையாளர்க உள்ளிட்ட பலரும் சதவிகித கணக்குப் படி பங்கு பிரித்துக்கொள்கின்றனராம்.

பதின் பருவத்தினர் தடுமாற்றம்
1980 வரை மது குடிப்பவனின் சராசரி வயது 28 ஆக இருந்தது. ஆனால் இப்போது பதின் பருவத்து இளைஞனும் காலை நேரத்திலேயே டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் அல்லது அதிகாலையில் கள்ளத்தனமாக அதிகவிலைக்கு விற்பனை செய்யப்படும் மதுவை வாங்கி குடித்துவிட்டு பள்ளிக்குச் செல்கின்றனர் என்பதுதான் வேதனையான விசயம்

5 ஆண்டில் ரூ.2 லட்சம்
தமிழகத்தில் மதுவுக்கு அடிமையானவர்களில் 20 சதவீதத்தினர் தினமும் ஒரு குவார்ட்டரையாவது காலி செய்கின்றனர். தினசரி ஒரு குவார்ட்டர் அடிக்க சைட் டிஸ் உடன்100 வரை ரூபாய் செலவு செய்கின்றனர். ஒரு ஆண்டில் 36,500 ரூபாயை காலி செய்கின்றனர். இதுவே ஐந்து ஆண்டுகளில் 1,82,500 ரூபாய் சத்தமில்லாமல் குடிமூலம் காலியாகிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழைகள் பொருளாதார ரீதியாகவும், உடல்நலத்தினாலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பணத்தை சேமித்தால், வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சேமித்துவைக்கலாம்.

வருங்கால சமுதாயம்
அரசுக்கு தேவையான நிதி ஆதாரங்களை பூர்த்தி செய்வதில் டாஸ்மாக் கடைகள் முக்கிய பங்காற்றுகிறது எனினும், மது குடிப்பதால் சமூகத்தில் ஏற்படும் பதற்றமே அதை மூடவேண்டும் என்ற குரல் வலுவடைந்து வருகிறது. எதிர்கால தமிழ் சமூகத்திற்கு ஏற்படும் ஆபத்தை இப்போதே தடுக்க தவறி வருகிறோம் என்பது தான் சமூக ஆர்வலர்களின் கவலையாக உள்ளது.












Click it and Unblock the Notifications