சேட்டிலைட் போன் வைத்திருந்த இலங்கை தமிழர் திருச்சியில் கைது
திருச்சி: இந்தியாவில் தடை செய்யட்டிருக்கும் சேட்டிலைட் செல்போன் போன் வைத்திருந்த இலங்கை தமிழரை க்யூ பிரிவு போலீசார் திருச்சியில் நேற்று கைது செய்தனர்.
திருச்சி அடுத்த துவாக்குடி அருகே உள்ள தேனீர்பட்டியில் வசிப்பவர் ராமச்சந்திரன் (40). இலங்கைத் தமிழரான இவர், அதேப்பகுதியில் தோப்புடன் கூடிய வீட்டில் வசித்து வந்தார். இவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக சிகிச்சைக்காக தமிழகம் வந்த ராமச்சந்திரன், தனது உறவினர்கள் சிலர் திருச்சியில் இருப்பதால் இங்கேயே வீடு கட்டி தங்கியுள்ளார். அவ்வப்போது ராமச்சந்திரன் ஆஸ்திரேலியா சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போனை ராமச்சந்திரன் பயன்படுத்தி வருவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து க்யூ பிரிவு போலீஸ் அதிகாரிகள் செவ்வாய்கிழமை இரவு தேனீர்பட்டியில் உள்ள வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சேட்டிலைட் போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். தேனீர்பட்டியில் எந்த செல்போன் சிக்னலும் கிடைக்கவில்லை என்பதால் ஆஸ்திரேலியாவில் உள்ள உறவினர்களிடம் அவசரத்திற்கு பேசுவதற்காக இந்த சேட்டிலைட் போனை வைத்திருந்தாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த போனுக்காக சிம் கார்டு சார்ஜ் செய்யும் வசதி இங்கு இல்லை என்பதால் ஆஸ்திரேலியாவில் உள்ள உறவினர்களிடம் சொல்லி ரீசார்ஜ் செய்து வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் சேட்டிலைட் போன் பயன்படுத்த தடை உள்ளது தெரியாது என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து ராமச்சந்திரனை நேற்று திருச்சி ஜே.எம்.6 கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ராமச்சந்திரனிடம் கைப்பற்றப்பட்ட சேட்டிலைட் போனின் சிம்கார்டு ஆய்வுக்காக பெங்களூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஒரு நிமிடத்திற்கு ரூ.215
சேட்டிலைட் போன் வைத்திருந்தாக திருச்சியில் முதன்முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேட்டிலைட் போன் எண் 13 இலக்கங்களைக் கொண்டதாக இருக்கும். மேலும் அந்த போனை உபயோகிப்பவர்களுக்கு இன் கம்மிங் மற்றும் அவுட் கோயிங் ஆகியவை கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன. வெளியிடங்களுக்கு பேச 1 நிமிடத்திற்கு 4 டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும். நேற்றைய நிலவரப்படி ஒரு நிமிடத்திற்கு ரூ 215.24 ஆகும்.
மத்திய அரசு தடை
சேட்டிலைட் போன்களை பயன்படுத்தவோ அல்லது அவற்றை வைத்திருக்கவோ, இந்தியன் டெலிகிராப் சட்டம் 1885ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு செல்போன் கம்பெனிகளின் நெர்வொர்ட்கின் கீழும் இந்த சேட்டிலைட் போன்கள் வராது. இதனால் இந்த வகை சேட்டிலைட் போன்களை தீவிரவாதிகள் பயன்படுத்தி தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்வதால், பாதுகாப்பு காரணங்களுக்காக, அவற்றிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications