தமிழகத்திற்கென ரயில்வே அமைச்சகம், அமைச்சர் தேவை: ஜெ.வுக்கு பிரின்ஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

குமரி: தமிழக ரயில்வே துறை வளர்ச்சியடைய மாநிலத்திற்கு என்று தனியாக ரயில்வே அமைச்சரை நியமிக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதாவுக்கு குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே வழித்தடங்கள் அனைத்தும் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு ரயில் போக்குவரத்து மிக முக்கியமான முதுகெலும்பாக உள்ளது. தமிழகத்தில் உள்ள வணிகர்கள் ரயில் மூலம் சரக்கு போக்குவரத்து விரைவாகவும், பாதுகாப்பாகவும், மிக குறைந்தவிலையிலும் செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு ரயில்வே துறையால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது 3885 கி.மீ தூரம் ரயில் இருப்புபாதை வழித் தடம் உள்ளது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய ரயில்வே கோட்டங்கள் உள்ளன. தமிழகத்தில் ஒரு மாவட்டத்துக்கு சராசரியாக சுமார் 120 கி.மீ ரயில் இருப்புபாதை என 32 மாவட்டங்களில் ரயில் தடம் பரந்து விரிந்து காணப்படுகிறது.

தமிழக ரயில்வே வழித் தடத்தில் சென்னை- கோயம்பத்தூர் 497 கி.மீ, மதுரை- திண்டுக்கல் 66 கி.மீ மற்றும் சென்னை எழும்பூர்- செங்கல்பட்டு 56 கி.மீ வழி இருப்புபாதை தடம் மட்டுமே இருவழிபாதையாக உள்ளது.

தமிழகத்தில் உள்ள மற்ற அனைத்து ரயில் பாதைகளும் சுமார் 80 சதவிகிதம் ஒரு வழி இருப்பு பாதையாகவே உள்ளது. இதை போல் தமிழகத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து சுமார் 3000 கி.மீ அளவுக்கு புதிய இருப்புபாதை அமைப்பதற்கு சர்வே செய்யப்பட்டு செயல்படுத்தப்படாமல் உள்ளது. தமிழகத்தின் முதுகெலும்பு ரயில் பாதையாக சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி ரயில் பாதை உள்ளது. இந்த ரயில் தடம் தமிழகத்தின் ரயில் போக்குவரத்துக்கு முதுகெலும்பாக உள்ளது.

இந்த வழித் தடம் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி நாகர்கோவில், திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை எழும்பூரை சென்றடைகிறது. இந்த வழித் தடம் வழியாக தென் தமிழ்நாட்டிலிருந்து இயங்கும் அனைத்து ரயில்களும் இயங்குகின்றன. இந்த வழித் தடத்திலிருந்து தமிழ்நாட்டின் இதர பகுதிகளுக்கு ரயில் வழித் தடங்கள் பிரிந்து செல்கிறது. இந்த ரயில் பாதை ஒரு வழிப்பாதையாக இருப்பதால் புதிய ரயில்களை தென் மாநிலங்களுக்கு விடமுடியாத நிலை உள்ளது.

தமிழகத்தின் பக்கத்து மாநிலமான கேரளம் ரயில்வே துறையில் வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது. கேரளாவில் உள்ள திருவனந்தபுரம்- காசரகோடு ரயில் வழி தடம் இருவழிபாதையாகவும், மின்சார ரயில்பாதை முடியும் தருவாயில் உள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் ரயில்வே வளர்ச்சியில் ஐம்பது சதவிகிதம் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு புதிய ரயில்வே திட்டங்களை திட்ட கமிஷனிடம் அனுமதி வாங்கி செயல்படுத்தி வருகிறது.

தென் இந்தியாவில் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்கள் ரயில்வே துறை வளர்ச்சியில் படுவேகமாக முன்னேறி வருகிறது. தமிழகத்தில் கணிசமான அளவு மிட்டர் கேஜ் ரயில்பாதைகள் தற்போது உள்ளன. தற்போது தமிழகத்தில் உள்ள ஒருசில மாவட்டங்களில் உள்ள இருப்புபாதை வழிதடங்கள் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்டத்தின் கீழ் வருகின்றது. இந்த பகுதிகள் ரயில்வே துறையால் பல ஆண்டுகளால் தொடந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அமைச்சரவையில் ரயில்வே வளர்ச்சி துறைக்கு என தனி அமைச்சர் நியமிக்க கோரிக்கை:

தமிழகம் ரயில்வே துறையில் வளர்ச்சி பெறுவதற்கும், தமிழக பயணிகள் பயன்படும் விதமாக புதிய ரயில்கள் இயக்குதல், தமிழகத்தில் உள்ள ரயில்பாதையை, இருவழிபாதையை அதிகப்படுத்துவதற்கும், புதிய ரயில் இருப்புபாதைகள் அமைக்கவும், தற்போதுள்ள மிட்டர் கேஜ் ரயில்பாதைகளை அகல ரயில்பாதைகளாக மாற்றும் பணியை துரிதப்படுத்துதல் என பல ரயில்வே திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட வேண்டியுள்ளது. இதற்கு தமிழக அமைச்சரவையில் ரயில்வே வளர்ச்சி துறைக்கு என தனி அமைச்சர் நியமிக்க வேண்டும்.

1050 கி.மீ தூரம் இருப்புபாதை கொண்ட கேரளாவில் தற்போது இது போன்ற ஒரு அமைச்சர் செயல்பட்டு கொண்டிருக்கிறார். கேரளா அமைச்சர் ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே பட்ஜெட்டுக்கு முன்பு அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட மக்களின் கோரிக்கைகளை தொகுத்து மிக பெரிய கோரிக்கை பட்டியல் தயார் செய்து மத்திய ரயில்வே அமைச்சரை நேரடியாக சந்தித்து அவர்கள் மாநில கோரிக்கையை சாதித்து கொள்கின்றனர். இதை போல் தமிழகத்திலிருந்து ஓர் மாநில ரயில்வே அமைச்சர் இருந்தால் தமிழகம் ரயில்வே வளர்ச்சியில் முன்னேறும் என்பதில் சந்தேகம் இல்லை.

தலைமை செயலகத்தில் ரயில்வே துறைக்கு என தனி அமைச்சகம் அமைக்க கோரிக்கை:

தமிழகத்தில் ரயில்வே துறை வளர்ச்சிக்கு என தனியாக தலைமை செயலகத்தில் மற்ற துறைகளுக்கு இருப்பது போன்று தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். இதில் பணிபுரியும் முதன்மை செயலாளராக தெற்கு ரயில்வே மண்டலத்தில் பொது மேலாளர், கூடுதல் பொது மேலாளர் போன்ற பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரியை நியமிக்க வேண்டும். இவர்களை நியமிப்பதால் அவர்களுக்கு தமிழக ரயில்வே திட்டங்கள் பற்றி போதிய தகவல்களும், பொது மக்களின் கோரிக்கைகள் பற்றிய விவரங்கள் அறிந்திருப்பதால் வளர்ச்சி பணிக்கு கூடுதல் உதவியாக இருக்கும்.

மாவட்ட அளவில் ரயில்வே அதிகாரியை நியமிக்க கோரிக்கை:

மாவட்ட அளவில் ரயில்வே வளர்ச்சிக்காக புதிய ரயில்களை இயக்குதல், புதிய ரயில் வழித் தடங்கள் அமைத்தல், ரயில்வே அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்தல், ரயில்களுக்கு போதிய நிறுத்தம் செய்தல் இது போன்ற ரயில்வே சம்மந்தமாக அனைத்து பணிகளையும் மத்திய அரசின் ரயில்வே துறையின் தெற்கு ரயில்வே மண்டல அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுத்துவதற்கு மாவட்ட அளவில் ரயில்வே அதிகாரி என்று ஒருவர் இருந்தால் நிச்சயமாக ரயில்வே துறையில் தமிழகம் வளர்ச்சி பெறும் என்று நம்புகிறேன்.

எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட அளவில் ரயில்வே சந்மந்தமான வளர்ச்சிப் பணிகளை கவனிப்பதற்கு என தனி அதிகாரியை District Train Transport Development Officer என்ற பெயரில் அமைக்க வேண்டும். இந்த அதிகாரி அந்த மாவட்டம் எந்த கோட்டத்தில் அமைந்துள்ளதோ அந்த ரயில்வே கோட்டத்தில் பணிபுரிந்த கோட்ட மேலாளர் அந்தஸ்து அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும். இந்த அதிகாரியின் முக்கிய பணி பொதுமக்களிடமிருந்து வரும் கோரிக்கை மனுக்களை தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் முறையிட்டு கோரிக்கையை நிவிர்த்தி செய்பவராக இருக்க வேண்டும்.

தமிழக முதல்வர் அவர்கள் இந்த கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து தமிழக ரயில்வே வளர்ச்சிக்காக நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+