அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு டீசல் விலையை குறைக்காவிடில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு போக்குவரத்து கழகத்திற்கு வழங்கப்படும் டீசல் விலையை மத்திய அரசு குறைக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதற்கேற்ப அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் எனது ஆட்சியில் செயல்பட்டு வருகின்றன. மொத்தத்தில் நாட்டின் பொருளாதார சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு டீசல் விலையை 6 ரூபாய் அளவுக்கு உயர்த்திய நிலையில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டொன்றுக்கு கூடுதலாக 383 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட போதிலும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அந்தக் கூடுதல் சுமையை பயணிகளின் மீது திணிக்காமல் அந்தச் செலவை எனது தலைமையிலான தமிழக அரசே ஏற்றுக் கொண்டது.

மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தி நான்கு மாதங்களே ஆகியுள்ள சூழ்நிலையில், ஏதோ ஒரு காரணத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக சர்வதேச சந்தை விலையை சுட்டிக்காட்டி, விலைவாசி உயர்விற்கு வித்திடும் வகையில் டீசல் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கி மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த மக்கள் விரோதச் செயலை நான் கண்டித்ததோடு மட்டுமல்லாமல், இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன். ஆனால் வழக்கம் போல மத்திய அரசு எனது கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

மாறாக, மத்திய அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், டீசலுக்கான விலையை லிட்டருக்கு 55 பைசா அளவுக்கு அதிகரித்தும், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உட்பட மொத்தமாக டீசல் வாங்கும் நிறுவனங்களுக்கான டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 11 ரூபாய் அளவுக்கு உயர்த்தியும் எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன.

அதாவது லாபம் ஈட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தனியார் பேருந்துகளுக்கான டீசல் விலை லிட்டருக்கு 55 பைசா அளவுக்கும்; லாப நோக்கமின்றி ஏழை, எளிய மக்களுக்காக சேவை மனப்பான்மையுடன் செயல்படும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளுக்கான டீசல் விலை இது வரை உயர்த்தியிராத வகையில் லிட்டருக்கு 11 ரூபாய் 81 காசு அளவுக்கு, அதாவது கிட்டத்தட்ட 25 விழுக்காடு அளவுக்கும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டொன்றுக்கு 1,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். இந்த இழப்பை ஈடு செய்ய பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வேறு வழியில்லை என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும் வண்ணம், 24.1.2013 அன்று எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிதி அமைச்சர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், மாண்புமிகு வீட்டுவசதித் துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், வளர்ச்சி ஆணையர் மற்றும் உள்துறை முதன்மைச் செயலாளர், நிதித்துறை முதன்மைச் செயலாளர், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் டீசல் விலை உயர்வு காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டு இருக்கக்கூடிய கூடுதல் சுமை குறித்தும், அதை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த விரிவான விவாதத்திற்குப் பிறகு டீசல் விலை உயர்வினால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு சுமைகளைச் சுட்டிக்காட்டி, சேவை மனப்பான்மையுடன் செயல்படும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கு ஒரு விலை; லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தனியார் பேருந்துகளுக்கு ஒரு விலை எனும் இரட்டை டீசல் விலை கொள்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்றும்; ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்காக லாப நோக்கமின்றி செயல்படும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கு குறைந்த விலையில் டீசல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி பிரதமருக்கு விரிவான கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் நான் பிரதமருக்கு விரிவான கடிதம் ஒன்றினை எழுதியுள்ளேன்.

ஏழை, எளிய மக்களைப் பாதிக்கும் இரட்டை டீசல் விலைக் கொள்கையை உடனடியாக கைவிடுமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டுமென்று தமிழக மக்களின் சார்பில் மத்திய அரசை இந்த அறிக்கையின் வாயிலாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள கூடுதல் சுமையை அரசே ஏற்கும் என்ற முடிவினையும் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமருக்கு நான் எழுதியுள்ள கடிதத்தில் உள்ள கோரிக்கையின் நியாயத்தினைக் கருத்தில் கொண்டு, பிரதமர் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்படும் டீசலுக்கு தற்போது கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையினை நீக்க உத்தரவிடுவார் என்று நான் நம்புகிறேன். மத்திய அரசு அவ்வாறு செய்யவில்லை எனில் உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து தமிழக அரசு சார்பில் வழக்கு தாக்கல் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+