கூடியது தேமுதிக பொதுக்குழு... ஆனால் கூட்டணி குறித்து மூச்சையே காணோம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிகவின் மாநில பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரி வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று காலை நடந்தது. இதில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்பட்டதாக தெரியவில்லை. மற்றபடி பல்வேறு தீர்மானங்களைப் போட்டு நிறைவேற்றியுள்ளனர்.

லோக்சபா தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டமாக இது பார்க்கப்பட்டது. குறிப்பாக அடுத்து யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து கட்சியினரின் கருத்துக்களை அறிய விஜயகாந்த் இதைக் கூட்டியதாக கூறினார்கள்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அரசியல் ரீதியாக ஒரு அங்கீகாரத்தை பெற்ற கட்சியான தேமுதிக, வருகிற லோக்சபா தேர்தல் மூலம் மத்தியிலும் ஒரு அறிமுகத்தைப் பெற துடியாக உள்ளது.

லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேரலாம் என்று தேமுதிகவினரில் பெரும்பான்மையானோர் கருதுவதாக தெரிகிறது. இதுகுறித்து இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதுபோக ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இரங்கல் தீர்மானம்

இரங்கல் தீர்மானம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு பாடு பட்டு உழைத்து சிறப்பான முறையில் பணியாற்றி அண்மையில் இயற்கை எய்திய வி.எஸ். திருப்பதி, துரைராஜ், பி. மாயாண்டி, நா.சரவணன், எஸ். ராக்கியண்ணன், பாலாஜி, ரமேஷ், பாண்டியன், எம். பாலகிருஷ்ணன், பி. அமுல்ராஜ், சண்முகம், ஜவஹர்குமார், ராம மூர்த்தி, கண்ணதாசன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றப்படுகிறது.

காவிரி விவசாயிகளுக்கு இரங்கல்

காவிரி விவசாயிகளுக்கு இரங்கல்

காவிரியில் போதிய நீர் கிடைக்காததால் காவிரி பாசன பகுதியை சார்ந்த விவசாயிகள் 12 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இப்பொதுக்குழு அவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அவர்கள் குடும்பத்தினரின் வாழ்வுரிமைக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

மின்வெட்டுக்குக் கண்டனம்

மின்வெட்டுக்குக் கண்டனம்

தமிழ்நாட்டில் இது வரையில் வரலாறு காணாத அளவுக்கு மின்சாரப் பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. இதற்கு அரசை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

விவசாயிகள் சாகுபடியை இழந்து தவிக்கின்றனர்

விவசாயிகள் சாகுபடியை இழந்து தவிக்கின்றனர்

காவிரி நீர் பாசனப் பகுதியில் விவசாயிகள் குறுவை சாகுபடியையும், சம்பா சாகுபடியையும் இழந்து தவிக்கின்றனர். போதிய நீர் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதை முன்கூட்டியே விவசாயிகளுக்கு தெரிவித்து இருந்தால் விவசாயிகள் இந்த இக்கட்டான நிலைக்கு துரத்தப்பட்டு இருக்க மாட்டார்கள். அரசு அறிவித்த 12 மணிநேரம் மின் சாரமும் கிடைக்கவில்லை.

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வழங்குக

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வழங்குக

விவசாயிகளின் துயர் துடைக்க ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு தொகை அளிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

பேரிடர் நிவாரணப் பணிகள் அவசியம்

பேரிடர் நிவாரணப் பணிகள் அவசியம்

தமிழ்நாட்டின் வறட்சிப் பகுதிகளை உடனடியாக கண்டு ஆராய்ந்து, வறட்சிப் பகுதி என்று அறிவித்து அதற்குரிய நிவாரணப் பணிகளை உடனடியாக அரசு மேற்கொள்ள வேண்டும். இயற்கை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்திய அரசிடம் இருந்தும் உரிய நிதி உதவியை பெற இப்பொழுதே, அதாவது கோடை காலம் வருவதற்கு முன்பே தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

அவதூறு வழக்குகளை வாபஸ் பெறுக

அவதூறு வழக்குகளை வாபஸ் பெறுக

தமிழ்நாட்டில் மக்களுக்காக மக்கள் பணி என்ற திட்டத்தின் கீழ் கழகத் தலைவர் விஜயகாந்த் பல்வேறு மாவட்டங்களில் கலந்து கொண்டு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி உரையாற்றினார். கட்சியினர் தங்கள் சொந்த செலவில் செய்யும் இந்த நற்பணிகளை மக்கள் பெரிதும் வரவேற்றனர். இதற்காக அவர் மீது பொய்யாக தொடுக்கப்பட்டு இருக்கும் அவதூறு வழக்கு களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

ஜாதி மோதல்களை தடுக்கவேண்டும்

ஜாதி மோதல்களை தடுக்கவேண்டும்

தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக ஜாதி மோதல்கள் அதிகமாகி வருகின்றன. இதனால் சமூக ஒற்றுமை குலைந்து வருகிறது. சம்பவங்கள் நடைபெற்ற பிறகு காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இப்பொதுக்குழு விரும்புகிறது.

கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் கொள்முதல் விலை

கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் கொள்முதல் விலை

கரும்பு விவசாயிகளுக்கு கொள்முதல் விலை ரூபாய் 2,350 அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று விலைவாசி உயர்வினாலும், வேலைக்கு போதிய ஆட்கள் கிடைக்காததாலும் கரும்பு விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ் நிலையில் கரும்பு பயிரிடுகிற விவசாயிகளுக்கு கொள் முதல் விலை ஒரு டன்னுக்கு 3,500 ரூபாய் வழங்குவதுதான் பொருத்தமான இருக்கும் என்று இப்பொதுக்குழு கருதுகிறது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. இதற்கு ஒப்புக்கொண்ட மத்திய அரசு அரசிதழில் வெளியிடாமல், வழக்கறிஞர்களின் கருத்தை அறிந்த பிறகே வெளியிடப் போவதாக தற்பொழுது அறிவித்துள்ளது. இப்பொதுக்குழு மத்திய அரசின் இந்த போக்கை கண்டிப்பதோடு, உடனடியாக காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

கற்பழிப்புக்குக் கடும் தண்டனை

கற்பழிப்புக்குக் கடும் தண்டனை

டெல்லியில் நடைபெற்ற பாலியல் பலாத்காரத்தை போல, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும் நடைபெற்ற சம்பவத்தை நாம் அறிவோம். இந்த படுபாதகமான நிலையை மாற்ற கடுமையான தண்டனை வழங்கும் வகையில் உரிய சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று இந்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

ரயில் கட்டண உயர்வை வாபஸ் பெறுக

ரயில் கட்டண உயர்வை வாபஸ் பெறுக

ரயில் கட்டண உயர்வு, மருந்துகளின் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு போன்றவைகள் போதாதென்று, இந்திய அரசு தற்பொழுது டீசல் விலையையும் உயர்த்தி உள்ளது. அதோடு மட்டுமின்றி, டீசல் விலையை மாதந்தோறும் உயர்த்துகின்ற பொறுப்பை ஆயில் கம்பெனிகளுக்கே வழங்கி உள்ளது. இதனால் ஏற்கனவே பல வகையிலும் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கை சுமை அதிகரித்து வருகிறது. இந்திய அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

எப்ப வரும் கூடங்குளம்

எப்ப வரும் கூடங்குளம்

கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்படுவது குறித்து அவ்வப்பொழுது அறிக்கை வெளியிடப்படுகிறதே தவிர, அது எப்பொழுது செயல்படும் என்பதை இந்திய அரசு இதுவரையில் திட்டவட்டமாக தெரிவிக்கவில்லை. அப்பகுதி மக்களின் அச்சத்தையும், சந்தேகங்களையும் போக்கி, நிவாரணத் திட்டங்கள் உடனடியாக நிறைவேற்றப்பட்டு, அவர்கள் வாழ்வாதாரத்திற்கு உத்திரவாதம் அளித்து, அவர்களின் சம்மதத்தோடு அணுமின் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று இப்பொதுக்குழு மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறது.

முல்லைப் பெரியாறு

முல்லைப் பெரியாறு

முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்தில் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் இன்னும் அது நிறைவேற்றப்படவில்லை. மாநில அரசுகளுக்கு இடையேயான பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றுவது தலையாய கடமையாகும். இதுவரை இந்திய அரசு இதுபற்றி எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளாது இருக்கும் மெத்தனப் போக்கை இப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

சிங்கள ராணுவத்தைத் திரும்பப் பெறுங்கள்

சிங்கள ராணுவத்தைத் திரும்பப் பெறுங்கள்

சிங்கள இனவெறி அரசு இறுதிப் போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதியை சுற்றுலா தளமாக அறிவித்து இலங்கையின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இருந்து சிங்களர்களை பஸ்கள் மூலம் கொண்டு வந்து மகிழ்விப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்ற நடவடிக்கையாகும். அங்குள்ள மிச்சமுள்ள தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்ப் பகுதிகளில் இருந்து சிங்கள இனவெறி அரசின் ராணுவம் திரும்ப பெறப்பட வேண்டும்.

இலங்கை ராணுவத்துக்குப் பயிற்சி கூடாது

இலங்கை ராணுவத்துக்குப் பயிற்சி கூடாது

அரசியல் தீர்வு மூலம் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு உத்திரவாதம் வேண்டும். இந்திய அரசு இவற்றில் அக்கறை காட்டுவதற்கு பதிலாக, சிங்கள இனவெறி அரசின் ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி தரும் போக்கை இப்பொதுக்குழு கண்டிக்கிறது. தமிழக கடலோர மீனவர்கள் சிங்கள இனவெறி அரசால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் இன்னும் தொடருகிறது. இந்திய அரசு இதற்கான நிரந்தர தீர்வை காண இலங்கை அரசோடு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

பொதுக்குழுக் கூட்டத்தில் கூட்டணி குறித்து எந்தமுடிவும் எடுத்தனரா என்பது குறித்துத் தகவல் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+