ஓசூர் அருகே ரயில் மோதி 2 யானைகள் பலி, 5 யானைகள் படுகாயம்

தர்மபுரியில் இருந்து கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூருக்கு தினசரி காலை 5 மணிக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பாலக்காடு, மாரண்ட அள்ளி, ராயக்கோட்டை, ஊடேதுர்க்கம் காப்பு காடு பகுதி வழியாக பெங்களூர் செல்கிறது.
நேற்று அதிகாலை வழக்கம் போல் பயணிகள் ரயில் தர்மபுரியில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. ரயில் ராயக்கோட்டையை அடுத்த உள்ளுகுறுக்கை கிராமம் முத்தப்பன் கோவில் அருகே உள்ள வளைவில் திரும்பியபோது அங்கு சுமார் 35 காட்டு யானைகள் தண்டவாளத்தை கடந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த ரயில் யானைகள் மீது மோதியது.
இதில் 5 வயதில் ஒரு யானையும், 2 வயதான குட்டி யானை ஒன்றும் இறந்தது. இதில் ஒரு யானையை சுமார் 100 மீட்டர் தூரம் வரை ரயில் எஞ்சின் இழுத்துச் சென்றது. மேலும் 5 யானைகள் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
பயணிகளை யானைகள் திரும்பி வந்து தாக்கக்கூடும் என்பதால் தேன்கனிக்கோட்டை கூடுதல் கண்காணிப்பாளர் விஜய்குமார் தலைமையில் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், உத்தனப்பள்ளி சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இது குறித்து தகவல் கிடைத்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
சம்பவ இடத்திற்கு மருத்துவக்குழு வரவழைக்கப்பட்டு யானைகளுக்கு அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவை அங்கேயே புதைக்கப்பட்டன.
மேலும் இதே போன்று கடந்த 2003ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி இதே பகுதியில் ரயில் மோதி 5 யானைகள் சம்பவ இடத்திலேயே பலியானது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications