கல்லூரி மாணவியை பைக்கில் துரத்திய சினிமா நடிகர் உள்ளிட்ட இருவர் கைது!
கோவை: கல்லூரி மாணவி ஒருவரை பைக்கில் துரத்தித் துன்புறுத்தியதாக சினிமா நடிகர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்துப் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் மர்ஷிதா (20). கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் புதன்கிழமை மாலை கல்லூரி முடிந்து பைக்கில் வீட்டுக்குக் கிளம்பினார். அப்போது சிவானந்தா காலனியைச் சேர்ந்த ஃபைனான்ஸ் உரிமையாளர் கே.ஈஸ்வரன் (34), சிந்தாமணிபுதூரைச் சேர்ந்த எஸ்.அஜய் பிரதீப் (27) ஆகியோர் தங்களது பைக்கில் பின்தொடர்ந்தனராம்.
பாரதி பார்க் அருகே மர்ஷிதா வந்தபோது, வழிமறித்த இருவரும் பைக்குடன் அவரை கீழே தள்ளியதாகவும், பின்னர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து மர்ஷிதா சத்தம் போட்டதால், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதைக் கண்ட அவர்கள் இருவரும் பைக்கில் தப்பிவிட்டனராம்.
இது குறித்து மர்ஷிதா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சாய்பாபா காலனி போலீஸார், இளைஞர்கள் இருவரையும் கைது செய்தனர்.
அவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் அஜய் பிரதீப், சில தமிழ் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications