மலேசியாவில் சிற்ப வேலைப்பாடுக்கு பெயர்போன ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம்
கோலாலம்பூர்: மலேசியா செபராங் பெராயில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் பார்ப்பவரை ஈர்க்கும் வண்ணம் உள்ளது.
மலேசியா செபராங் பெராய் நகர் நிபோங் திபால் பகுதியில் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஆலயம் உள்ளது. 83 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோவில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுக்கு பெயர் போனது. அதிலும் 7 யானைகளின் வடிவம் அழகுற செதுக்கப்பட்டிருக்கும். இந்த யானை சிலைகளை செதுக்க இந்தியாவில் இருந்து 6 சிற்பக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக செதுக்கிய 7 யானைகள் பார்ப்பவர்களை ஈர்க்கும். பழைமை வாய்ந்த இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கடந்த 2007ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் 16 விநாயகர் சிலைகள் உள்ளன. ஒரு சிலை நுழைவு வாயில் கோபுரத்தில் உள்ளது. மற்ற சிலைகள் கருவறையை சுற்றியுள்ள சுவர்களில் உள்ளன. 9 மீட்டர் உயரத்தில் எண்கோண வடிவ மூலஸ்தானம் தேர் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பு. கோவிலில் 12 தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணிலும் காவல் தெய்வங்களின் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications
