வீரப்பன் கூட்டாளிகள் தூக்கிலிடப்படுவது எப்போது... இன்று மைசூர் தடா கோர்ட்டில் முடிவு

1993ம் ஆண்டு பாலாறு வனப்பகுதியில் வீரப்பன் கும்பலைச் சேர்ந்தவர்கள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 22 போலீஸார் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த மைசூர் தடா கோர்ட் கைதான மீசை மாதையன், பிலவேந்திரன், ஞானப்பிரகாசம், சைமன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர் இதை கர்நாடக உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால் இதை எதிர்த்து கர்நாடக அரசுத் தரப்பில் செய்யப்பட்ட அப்பீலை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆயுள் தண்டனையை, தூக்குத் தண்டனையாக உயர்த்தியது.
இதைத் தொடர்ந்து நான்கு பேரும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். அதை சமீபத்தில் குடியரசுத் தலைவர் நிராகரி்ததார். இதையடுத்து நால்வரையும் தூக்கிலிட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. மறுபக்கம் இவர்களைக் காப்பாற்ற தீவிர நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
தூக்கில் போடப்படும் தேதியை மைசூர் தடா கோர்ட் இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தூக்கிலிடுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டதாக கர்நாடக சிறைத்துறை கூடுதல் டிஜிபி ககந்தீப் கூறியுள்ளார்.
மேலும் நேற்று நான்கு பேருக்கும் மருத்துவப் பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. நான்கு பேரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் உத்தரவு வரவில்லை
அதேசமயம், வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு தண்டனை தொடர்பாக அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் இதுவரை சிறைச்சாலைக்கு வரவில்லை என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
வீரப்பன் கூட்டாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்திய டாக்டர் இதுகுறித்துக் கூறுகையில், தூக்கு தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு நடத்தப்படும் மருத்துவ பரிசோதனை வழக்கமானது தான். அதேசமயம், 4 பேரின் தூக்கு தொடர்பாக வெளியான தகவல் தவறானது என்றும், அவர்களை தூக்கிலிடுவது தொடர்பாக அதிகாரபூர்வ உத்தரவு எதுவும் இதுவரை வரவில்லை.
எப்போது தூக்கிலிடுவார்கள் என்பதைச் சொல்வதற்கு தகுதியான நபர் நான் இல்லை. அவர்களின் உடல்நிலையை, நன்றாக பார்த்துக் கொள்வது மட்டுமே தனது கடமை என்றார் அவர்.
இந்தப் பின்னணியில் இன்று தூக்கிலிடும் தேதியை அதிகாரிகள் முடிவு செய்யவுள்ளனர். அதேசமயம், கசாப், அப்சல் குருவைப் போல இந்த நால்வரையும் கூட திடீரென தூக்கில் போட்டு விட்டு செய்தியை மட்டும் வெளியிடலாம் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பும் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications