கோகுல இந்திரா, என்.ஆர். சிவபதியின் அமைச்சர் பதவி 'கல்தா' பின்னணி
சென்னை: சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த கோகுல இந்திராவின் அமைச்சர் பதவி அதிரடியாக நேற்று பறிக்கப்பட்டது. அதேபோல் பள்ளிக்கல்வித்துறை,சட்ட அமைச்சராக இருந்த என்.ஆர் சிவபதியின் பதவியும் பறிபோனது.
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் ஆவதும், யாருக்குமே அடையாளம் தெரியாத எம்.எல்.ஏக்கள் கூட சுழல் விளக்கு சுழல அமைச்சராக வலம் வருவதும் சாதாரணமான விசயம். 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்ற வார்த்தை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ அதிமுகவினருக்கு நிச்சயம் பொருந்தும்.

மியூசிக்கல் சேர்தான்
திமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக பொறுப்பேற்பவர்கள் 5 ஆண்டுகாலம் வரை அதே பதவியில் இருந்து அதன் நெளிவு சுழிவுகளை கற்று எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அந்த அளவிற்கு சம்பாதித்து விட்டுதான் வெளியேறுவார்கள். அடுத்த முறை பதவிக்கு வரும் அதே போல பசையான துறையை கேட்டு வாங்குவதும் உண்டு.
ஆனால் அதிமுகவில் ஒரு சிலரைத் தவிர யாரும் அப்படி பசை போட்டு ஒட்டிக்கொள்ள முடியாது அதிர்ஷ்டத்தின் படிதான் பதவியும் கிடைக்கிறது.

கோகுல இந்திராவின் பதவி
அ.இ.அ.தி.மு.கவின் மகளிர் அணித் தலைவியான கோகுல இந்திரா 2011 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாநகர் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர். ஜெயலலிதா அமைச்சரவையில் இவருக்கு அதிக வருமானம் தரக்கூடிய பதவி வழங்கப்பட்டது. பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே பசையான வணிக வரித்துறை பதவி பறிக்கப்பட்டு சுற்றுலாத்துறைக்கு மாற்றப்பட்டார்.

கிசுகிசுக்கப்பட்ட செய்தி
இவர் சசிகலா ஆதரவில் அமைச்சரானவர் என்றும் அதனால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனாலும் தப்பி பிழைத்த இவர் இப்போது பதவி இழந்து நிற்கிறார். இதற்கு காரணம் கோகுல இந்திராவின் கணவர், சகோதரர் தலையீடு அரசியலில் அதிகளவில் இருந்தது ஒரு காரணமாக கூறப்படுகிறது.

டெண்டர் விவகாரம்
சொந்த மாவட்டமான சிவகங்கையில் ஏற்பட்ட அரசியல் போட்டி மற்றும் சுற்றுலா டெண்டர் விடப்பட்டதில் ஏற்பட்ட பண பரிமாற்றமே பதவி பறிப்புக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

போய் போய் வருதே
பள்ளி கல்வி மற்றும் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் என்.ஆர்.சிவபதி. 2011ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி முதல் முறையாக ஜெயலலிதா அமைச்சரவையில் இவர் விளையாட்டு துறை அமைச்சராக இருந்தார். 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதில், பரஞ்ஜோதி நியமிக்கப்பட்டார். பின்னர் அவரும் மாற்றப்பட்டார்.

அடுத்த சுழற்சியில் பதவி
26.1.2012 அன்று அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோது மீண்டும் என்.ஆர்.சிவபதிக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இவரது திறமையை பாராட்டி சட்டம் மற்றும் நீதித்துறை பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக செயல்பட்டதால்தான் இவருக்கு அதிக பொறுப்புகள் கொடுப்பதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டது.

ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு
பதவி அதிகரிக்க அதிகரிக்க இவரது போக்கும் மாறிவிட்டதாக கூறப்படுகிறது.ஆசிரியர்கள் புதிய நியமனத்திலும் முறைகேடு செய்துள்ளதாக ஆதாரப்பூர்வமாக தலைமைக்கு தகவல் சென்றதையொட்டி இவர் 2வது முறையாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அமைச்சராக இறந்தவர்கள்
2011ம் ஆண்டு ஜெயலலிதா முதல் அமைச்சராக பதவி ஏற்றது முதல் இதுவரை பல அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதில் மரியம் பிச்சையும், கருப்பசாமியும்தான் அமைச்சர்களாக மரணமடைந்தவர்கள்.

பதவி பறிபோன அமைச்சர்கள்
முதன் முதலாக சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்ட இசக்கி சுப்பையா தொடங்கி ஜி. சண்முகவேலு, ஆர் பி உதயகுமார்,எஸ்பி சண்முகநாதன், புத்தி சந்திரன் செந்தமிழன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பரஞ்சோதி, செல்வி ராமஜெயம், எஸ்பி வேலுமணி, செங்கோட்டையான், சிவி சண்முகம், சிவபதி, டாக்டர் விஜய், கோகுல இந்திரா வரை பலரும் அமைச்சர்களாக இருந்து எம்.எல்.ஏக்களாக மாறியுள்ளனர். போகிற போக்கைப் பார்த்தால் இப்போது எம்.எல்.ஏக்களாக இருக்கும் அனைவருக்கும் சுழற்சி முறையில் அமைச்சர் பதவி கிடைத்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

அமாவாசை வந்தால்தான்...
அதிமுக ஆட்சி காலத்தில் அமாவாசை என்றாலே நடுங்குவார்கள். காரணம் அப்போதுதான் பதவி காலியாகும் என்பது பலரது நம்பிக்கை. ஆனால் இந்த முறை ஜெயலலிதாவின் பிறந்தநாள் முடிந்து மாசி மகம் பவுர்ணமி முடிந்த உடன் அமைச்சரவை திடீர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை அமாவாசைக்கு நடுங்கிய அமைச்சர்கள் இனி பவுர்ணமி வந்தாலும் நடுங்குவார்களோ?












Click it and Unblock the Notifications