தீவிரக் கண்காணிப்புக்கு மத்தியில் தொடங்கியது பிளஸ்டூ தேர்வு
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்டூ பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின. வருகிற 27ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.
மொத்தம் 2020 பள்ளிகளில் தேர்வு நடைபெற்றது. தனித் தேர்வர்களாக 48,788 பேரும், ரெகுலர் தேர்வர்களாக 8,04,534 பேரும் தேர்வு எழுத விண்ணப்பத்திருந்தனர்.
மாணவர்களின் எண்ணிக்கை 3,73,788 பேர் ஆவர். மாணவியர் எண்ணிக்கை 4,30,746 பேர் ஆவர்.
சென்னையில் 406 பள்ளிகளை சேர்ந்த 51,531 பேர் தேர்வு எழுத விண்ணப்பத்திருந்தனர். 140 மையங்களில் தேர்வு நடந்தது. புதுச்சேரியில் 107 பள்ளிகளை சேர்ந்த 12,611 பேர், 30 மையங்களில் தேர்வு எழுதவுள்ளனர்.
இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. வினாத்தாளைப் படித்துப் பார்க்க கால் மணி நேரம் அவகாசம் தரப்பட்டது. பிற்பகல் 1.15 மணிக்கு தேர்வு முடிந்தது.
தேர்வு எழுதும் மையங்களுக்கு சென்று கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது.
பிட் வைத்திருப்பது, பிட் அடிக்க முயற்சிப்பது, அருகில் அமர்ந்து இருக்கும் மாணவர்களை பார்த்து எழுதுவது, தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்து கொள்வது, தேர்வுத்தாள் மாற்றம் செய்தல், ஆள் மாறாட்டம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது கடுமையான குற்றம்.
இதுபோன்ற ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் சம்பந்தப்பட்ட பள்ளிக்கான தேர்வு மைய அனுமதி ரத்து செய்யப்படும். மேலும், பள்ளியின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும். தேர்வு நேரங்களில் அந்த பள்ளியை சேர்ந்த தாளாளரோ, ஆசிரியர்களோ அப்பள்ளி பணியாளர்களோ தேர்வு நடக்கும் வளாகத்தில் இருக்க கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications