ஏப்ரல் 5ம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக கூட்டுறவு சங்க தேர்தல்: கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையர்
சென்னை: தமிழகத்தில் உள்ள 22, 532 கூட்டுறவு சங்கங்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் 5ம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையர் எம்.ஆர்.மோகன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் இதர செயற் பதிவாளர்களான பால்வளத்துறை ஆணையர், கைத்தறித்துறை இயக்குனர், மீன்வளத்துறை ஆணையர், தொழில் வணிகத்துறை ஆணையர், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர், சர்க்கரைத்துறை இயக்குனர், பதிவாளர் (வீட்டு வசதி), சமூக நலத்துறை இயக்குனர், கதர் கிராம தொழில்துறை ஆணையர், வேளாண்மைத்துறை இயக்குனர் ஆகிய 14 செயற்பதிவாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் 22,532 கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன.
இந்த கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் சட்டப்படியும், நேர்மையாகவும் நடத்தப்படுவதற்காக தமிழக அரசு மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையம் ஒன்றை அமைத்தது. இதன் ஆணையராக நான் (எம்.ஆர்.மோகன்) பொறுப்பேற்று உள்ளேன். இந்த தேர்தல் ஆணையம் தான் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை தற்போது நடத்த உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்த தனியாக மாநில தேர்தல் ஆணையம் ஒன்று இருப்பதைப்போல கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்களை நடத்த கூட்டுறவு சங்கங்களுக்கான மாநில தேர்தல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக கூட்டுறவு விற்பனை சங்கங்கள் தவிர இதர தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இரண்டாம் கட்டமாக கூட்டுறவு விற்பனை சங்கங்கள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், செயற் பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய வகை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.
மூன்றாம் கட்டமாக மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் (தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் ஆகியவை தவிர) இதர தலைமை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. நான்காம் கட்டமாக மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள், கூட்டுறவு அச்சகங்கள், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ஆகிய கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஐந்தாம் கட்டமாக தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
முதல் நிலையில் தேர்தல் நடைபெறவுள்ள 22, 192 சங்கங்களுக்கான தேர்தல் நான்கு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்டத்தில் 5, 855 சங்கங்களுக்கும், 2-ம் கட்டத்தில் 5, 603 சங்கங்களுக்கும், 3-ம் கட்டத்தில் 5, 481 சங்கங்களுக்கும், 4-ம் கட்டத்தில் 5, 253 சங்கங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 5ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் 12ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் 19ம் தேதியும், நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 27ம் தேதியும் நடைபெறுகிறது.
கூட்டுறவு சங்க தேர்தலின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படக்கூடிய கூட்டுறவு சங்கங்கள் கண்டறியப்பட்டு அவற்றிற்கு காவல்துறை மூலம் கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஓட்டுப்பதிவு அமைதியாக நடைபெறுவதற்கும், ஓட்டுப்பெட்டிகளை பாதுகாப்பதற்கும் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன்பு நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களில் இல்லாத வகையில் தற்போது கூட்டுறவு தேர்தல் ஆணையம் மூலம் நடத்தப்படும் இந்த தேர்தலுக்கு தேர்தல் பார்வையாளர்கள் எல்லா மாவட்டங்களுக்கும் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் விதிமீறல்கள் இல்லாமலும், அமைதியான முறையிலும் தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்வார்கள்.
முதல் கட்ட தேர்தல் நடைமுறைகள் கடந்த 3ம் தேதி தொடங்கியது. இந்த நடைமுறைகள் வரும் மே மாதம் 6ம் தேதியுடன் முடிவடையும். இரண்டாம் நிலைக்கான தேர்தல் அட்டவணை தொடர்ந்து வெளியிடப்படும். இவ்வாறே அடுத்த நிலைகளுக்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்படும். கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் குறித்த விவரங்கள் பெறவோ அல்லது புகார்கள் இருந்தால் அதுபற்றி தெரிவிக்கவோ தேர்தல் ஆணைய அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் 044-24351403 என்ற தொலைபேசியை தொடர்பு கொண்டு கூறலாம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications