தமிழீழம் தொடர்பாக இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

டெல்லியில் நேற்று நடைபெற்ற டெசோ தீர்மான விளக்க கருத்தரங்கில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழீழத்துக்காகப் போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கு முதலில் வீரவணக்கம் செலுத்துகிறேன்.இலங்கையில் போரெஇல் கொல்லப்பட்டோருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை செலுத்துகிறேன். திமுக தலைவர் கருணாநிதியின் முடிவின்படி மிகவும் முக்கியமான தருணத்தில் தலைநகர் டெல்லியில் டெசோ அமைப்பின் கருத்தரங்கு நடைபெறுகிறது. ஈழத் தமிழர்களின் வரலாறு நெடுகிலும் துயரம் படிந்ததாக இருக்கிறது. ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் இக்கருத்தரங்கு நடைபெறுகிறது.
யாழ்ப்பாணம் போன புத்தர்
2,600 ஆண்டுகளுக்கு முன்பாக, யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையைத் தீர்க்க புத்தர் அங்கு சென்றார். தமிழ்க் காப்பியமான மணிமேகலையும் இலங்கையின் பாலி இலக்கியமான மகாவம்சமும் சீன யாத்ரீகர் யுவான்சுவாங்கின் குறிப்புகளும் யாழ்ப்பாணத்துக்கு புத்தர் சென்றார் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இதை ஏராளமான இலக்கியக் குறிப்புகளும் வரலாற்று சான்றுகளும் தெளிவுபடுத்துகின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு இருந்தே இலங்கைத் தீவில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதையே இவை வெளிப்படுத்துகின்றன.
தமிழர் துயரம்
யாழ்ப்பாணம், கோட்டை, கண்டி ஆகிய அரசுகள் இங்கிலாந்து ஆட்சியாளர்களால் ஒன்றிணைக்கப்பட்டு 1948-ம் ஆண்டு பிப்ரவரி 4-ந் தேதி சிங்களவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அதன் பின்னர் சிங்களர்கள் தங்களது மேலாதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கினர். மூத்த மொழியான தமிழ் மொழி, கலாச்சாரம், மதம் அனைத்தும் ஒடுக்குமுறைக்குள்ளானது. சிங்கள இனவாதத்தால் அங்கு புரட்சி வெடித்தது. 1983ஆம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை 4 ஈழப் போர்கள் நடைபெற்றிருக்கின்றன. லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள் குடும்பம் குடும்பமாக அழிக்கப்பட்டிருக்கின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளையும் குழந்தைகள் பெற்றோர்களையும் இழந்திருக்கின்றனர். பெண்கள் பல்லாயிரக்கணக்கில் விதவையாகி இருக்கின்றனர். பெண்கள் பலாத்காரங்களுக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். பல்லாயிரம் தமிழர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
லட்சக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். தங்களது பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் சொத்துகளையும் வர்த்தகங்களையும் தொழிலையும் விட்டுவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த இடங்களை எல்லாம் சிங்களர்கள் திட்டமிட்டு அபகரித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழர்களின் கலாச்சார மத அடையாளங்கள் நிர்மூலமாக்கப்பட்டன. இலங்கைத் தீவில் தமிழ் தேசிய இனத்தை முற்றாக அழிக்க திட்டமிட்டு செயல்படுகின்றனர். இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு மொழி ஒரு மதம் என்ற அடிப்படையிலேயே சிங்களர்கல் செயல்படுகின்றனர்.
ஈழத் தமிழரும் திமுகவும்
ஈழத் தமிழரின் துயரைத் துடைக்க 13.5.85 அன்று டெசோ அமைப்பை திமுக தலைவர் கருணாநிதி தொடங்கினார். தமிழ் ஈழத்துக்கான முயற்சிகள் அனைத்தையும் 1950-ம் ஆண்டில் இருந்தே தி.மு.க. ஆதரித்து வருகிறது. 1956-ஆம் ஆண்டு அண்ணா தலைமையிலான பொதுக் குழுவில் தனிச் சிங்கள சட்டத்தைக் கண்டித்து அது தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கும் முயற்சி என்று கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்தார். தொடர்ந்தும் ஈழத் தமிழரின் துயரைத் துடைக்க திமுக போராடி வருகிறது. அவர்களது துயரமோ நீடித்தே வருகிறது. இதனால் கடந்த 2012-ம் ஆண்டில் மீண்டும் ÔடெசோÕ புதுப்பிக்கப்பட்டது.12.8.12 அன்று நடந்த முதல் டெசோ மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானங்கள் ஐ.நா. சபைக்கும், ஐ.நா. மனித உரிமைகள் கமிஷனுக்கும், அதன் உறுப்பினர் நாடுகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இலங்கைத்தமிழர்களின் துயரங்கள் அனைத்தும் ஆழமாக கவனிக்கப்பட்டு வாதிடப்பட்டுள்ளன.
பாலச்சந்திரன் படுகொலை
ஒரு கோரமான இனப்படுகொலை பற்றி பல நாடுகள் தற்போது உணரத்தொடங்கியிருக்கின்றன என்பதை நம்மால் அறிய முடிகிறது. பல்வேறு அதிர்ச்சியூட்டும் ஆதாரங்கள் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, இனப்படுகொலை பற்றிய விழிப்புணர்வு மேலும் அதிகரித்துள்ளது. சேனல்-4 என்ற நிறுவனம் வெளியிட்ட நோ பயர் சோன்-த கில்லிங் பீல்ட் ஆப் ஸ்ரீலங்கா என்ற ஆவணப்படங்கள், இலங்கை அதிபர் ராஜபக்சே அரசின் போர்க்குற்றங்களுக்கு உறுதியான சான்றுகளாக உள்ளன.அதில் காட்டப்படும் காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியூட்டுவதாக உள்ளன.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனின் கொடூர கொலையை பார்த்ததில் இருந்து, நமது இதயமெல்லாம் வேதனையால் துடித்துக்கொண்டிருக்கிறது. மோசமான படுகொலை அது. ஈழத்தமிழ் போராளிகளை இலங்கை ராணுவம் எப்படியெல்லாம் துன்புறுத்தினர், கொத்துக் கொத்தாக, துடிக்கத் துடிக்க கொலை செய்தனர் என்பதையெல்லாம் அந்த ஆவணப்படங்கள் அப்பட்டமாக உலகுக்கு காட்டுகின்றன.
ஹிட்லராக ராஜபக்சே
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், இனப் படுகொலை, போர்க்குற்றங்கள் போன்ற வெட்கக் கேடான துயரங்களுக்கு ராஜபக்சேதான் பொறுப்பேற்க வேண்டும் என்பதை, சர்வதேச அமைப்புகளின் விசாரணைகள், சாட்சியங்கள் தூக்கி நிறுத்துகின்றன.கடந்த நூற்றாண்டு பல சர்வாதிகாரிகளை கண்டது. இவர்களில் ஹிட்லரோடு ராஜபக்சேவை ஒப்பிடலாம். யூதர் இனப்படுகொலையை நடத்தியவர் ஹிட்லர். அதுபோல் இலங்கையில் தமிழ் இனத்தை அழிக்க முயன்றவர் ராஜபக்சே.
பொதுவாக்கெடுப்பு
இந்தியாவுடன் தொப்புள் கொடி உறவுடைய பாரம்பரிய வரலாற்றைக் கொண்ட இலங்கைத்தமிழர்கள் அங்கு அழிக்கப்படுவதை, மகாவீரர், புத்தர், திருவள்ளுவர், காந்தி, நேரு, பெரியார், அண்ணா வாழ்ந்த இந்தியா பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்கிறது.ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். தாமதிக்கும் நீதி, மறுக்கப்பட்ட நீதியாகி விடும். நீண்டகால காத்திருப்பு முடிந்து விட்டது. நீதி வழங்குவதுதான் பாக்கியாக உள்ளது. அங்குள்ள தமிழர்கள் உடனடியாக குடியமர்த்தப்பட்டு, அவர்கள் மறுவாழ்வு பெற வழிவகுக்க வேண்டும். இலங்கையில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக சர்வதேச சுதந்திரமான விசாரணை நடத்துவது பற்றி அனைத்து நாடுகளும் சிந்திக்க வேண்டும்.பொது வாக்கெடுப்பு முறையில் அரசியல் தீர்வு காணப்படலாம். இன்னும் தாமதம் செய்தால் அதை வரலாறு மன்னிக்காது. அங்குள்ள அவசரத்தை இந்தியாவும், உலக அமைப்புகளும் உணர வேண்டும் என்றார் ஸ்டாலின்.
இக்கருத்தரங்கில் பேசிய மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், இலங்கைப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுயேச்சை ஆணையத்தை நியமித்து விசாரிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications