இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்: ரூ.3,500 கோடியில் புதிய திட்டங்கள் அறிவிப்பு?

2013-2014ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ரிப்பன் கட்டிடத்தில் இன்று காலை 10.30 மணிக்கு மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில் துவங்கும் கூட்டத்தில் நிதிநிலைக் குழுத் தலைவர் சந்தானம் பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார். கூட்டத்தில் துணை மேயர், மாநகராட்சி ஆணையர், நிதித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
புதிய திட்டங்களுக்கான நிதி ரூ.3, 500 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு வரை 155 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் தற்போது 200 வார்டுகள் உள்ளன.
கடந்த ஆண்டு ரூ.2, 921 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மற்றும் சாலை மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய பட்ஜெட்டில் சுகாதாரம், கல்வி, மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
பழைய சென்னை மாகராட்சி பகுதிகளோடு ஒப்பிடுகையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் அதிக சொத்து வரி விதிக்கப்படுகிறது. இன்றைய பட்ஜெட்டில் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே மாதிரியான சொத்து வரி விதிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் போக்குவரத்து நெரிசல், கொசுத் தொல்லை, கிடப்பில் போட்டப்பட்ட பழைய திட்டங்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகளை கிளப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாம்.
கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களே இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டிலாவது விரைவில் முடிக்கக் கூடிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று எதிர்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications