இலங்கை அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பொங்கும் மாணவர்கள்….
சென்னை: இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தவும் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தவும் வகை செய்யும் விதத்தில் ஐ.நா.சபையில் இந்தியாவே தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லயோலா கல்லூரி மாணவர்கள் தொடங்கிய போராட்டம் மாநிலம் தழுவிய மாணவர்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. அறவழிப் போராட்டம்தான் எனினும் மாணவர்கள் பற்றவைத்துள்ள தீ லங்காவை பற்றத் தொடங்கியுள்ளது.
ராஜபக்ஷேவிற்கு எதிரான முழக்கம் மட்டுமல்ல கொடும்பாவி எரிப்பு கொடி கிழிப்பு என மாணவர்கள் ஆக்ரோசத்தோடு போராடத் தொடங்கியுள்ளனர். ரயிலை மறித்த மாணவர்கள், தங்களைத் தாண்டி ரயில் செல்லக்கூடாது என தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

மதுரையில் அரை நிர்வாண ஊர்வலம்
இலங்கைக்கு எதிராக மதுரையில் சட்ட கல்லூரி மாணவர்கள் ஊர்வலம் நடத்தினர். சட்டக் கல்லூரி மாணவர் சாமுண்டி தலைமையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தை நோக்கி வந்த மாணவர்கள் மேல் சட்டையை அவிழ்த்து அரை நிர்வாணமாக ஊர்வலம் வந்தனர். மேலும் இவர்களோடு அனைத்துக் கல்லூரி மாணவர்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கொடி கிழிப்பு
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலம் சென்ற மாணவர்கள் மதுரை தள்ளாக்குளம் பெருமாள் கோவில் திடல் உள்ள காங்கிரஸ் கட்சியின் கொடி கம்பத்தில் இருந்த கொடியை அவிழ்த்து கிழித்த அவர்கள், பின்னர் செருப்பால் அடித்தனர். இதனை பார்த்த போலீசார் மாணவர்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.

மத்திய அரசு அலுவலகத்திற்கு பூட்டு
இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு மாற்றம் செய்யாமல் ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சியில் சட்டக் கல்லூரி மாணவர்கள், மத்திய தபால் நிலையம் மற்றும் தந்தி அலுவலகம் வாயிற்கதவை இழுத்து மூடி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மாணவர்கள் கொந்தளிப்பு
அறவழியில் போராடிய சட்டக் கல்லூரி மாணவர்களில் ஒருவரை காவல்துறை ஆய்வாளர் அடித்ததால் மாணவர்கள் கொந்தளித்தனர். இதனைத் தொடர்ந்து சட்டக் கல்லூரி மாணவர்கள் திருச்சி,டோல்கேட் பகுதியில் மாபெரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

மாணவர்கள் மனித சங்கிலி
கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது திருவண்ணாமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் 200 பேர் இன்று ஈழப்பிரச்சனைக்காக மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை - வேலூர் சாலையில் உள்ள ஐ.டி.ஐ முன்பே இம்மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. கல்வி நிலையத்தின் முதலாமாண்டு மாணவர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் இந்திய அரசே அமெரிக்கா தீர்மானத்தை ஆதரிக்க தனி ஈழம் அமைய உதவி செய்த போர்குற்றவாளி ராஜபக்சேவை தண்டிக்கவேண்டும் எனவும் அவர்கள் கோஷமிட்டனர்.

கோவையில் மறுப்பு
கோவை சட்டக் கல்லுரி மற்றும் அரசு கலைக்கல்லுரி மாணவர்கள் இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து உண்ணாநிலை அறப்போரை மதிமுக கட்சி அலுவலகத்தில் நடத்தி வருகிறார்கள்.... நேற்று மாலை கல்லுரி முதல்வர் பேசிப் பார்த்தும் அவர்கள் உண்ணா நிலை அறப்போரை வாபஸ் பெற மறுத்து விட்டார்கள்.
சேலம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் காலையிலேயே வகுப்பு புறக்கணிப்பு செய்து உள்ளிரிப்பு போராட்டத்தை தொடங்கினர்.

நெல்லையில் போராட்டம் தீவிரம்
இலங்கைக்கு எதிராக நெல்லை மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ம.தி.தா. இந்துக்கல்லூரி பாளை ஜான்ஸ் மற்றும் சேவியர்கல்லூரி, வண்ணாரப்பேட்டை எப்.எக்ஸ்.இன்ஜினியரிங்கல்லூரி, பாளை சட்டக்கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், 100, 125 பேர்கள் என பேட்டை கல்லூரி வளாகம், சட்டக்கல்லூரி, வளாகம், பாஸ்போர்ட் அலுவலகப் பகுதி என, மூன்று பகுதிகளில் காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இவர்களில் 2 மாணவர்களின் உடல் நிலை சோர்வாகவும் உள்ளது.

தூத்துக்குடி மாணவர்கள் கைது…!
ஈழவிடுதலைக்காக தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி, வ.உ.சி.கல்லூரி, காமராஜ் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 43 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கல்லூரிகளுக்கு விடுமுறை
நெல்லை பாளையங்கோட்டையில் 13 மாணவர்கள் இன்று நான்காவது நாளாக மாணவர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கல்லூரிகளுக்கு காலவரையறையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்சே உருவபொம்மை எரிப்பு
இனப் படுகொலையில் ஈடுபட்ட இலங்கை அதிபர் ராஜபக்சே, இந்திய பிரதமர் மன் மோகன் சிங் ஆகியோரை கண்டித்துசெங்கோட்டை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டும், ராஜ பக்ஷே உருவ பொம்மையை எரித்தும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து செங்கோட்டை போலீசார் அவர்களை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications