மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம்: இலங்கை தூதரை அழைத்து கண்டிக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெ. கடிதம்

இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
ராமேசுவரம் மீன்பிடித் தளத்தில் இருந்து 9 இயந்திர படகுகளுடன் 53 மீனவர்கள் கடந்த 13ம்ம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை கைது செய்த இலங்கைக் கடற்படை, தலைமன்னார் மற்றும் நெடுந்தீவு ஆகிய இடங்களுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குறுகலான பாக் ஜல சந்திப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. இந்தச் சூழலில், பாக் ஜல சந்திப் பகுதியில் தமிழக அரசையோ அல்லது அதனுடைய மீனவர்களையோ கலந்து ஆலோசிக்காமல் இலங்கை அரசே தன்னிச்சையாக சர்வதேச எல்லைக் கோட்டை வகுத்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான மீன்பிடி பிரச்னைகளில், ஒரு நாட்டைச் சேர்ந்த மீனவர்களைத் தாக்கியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும், அவர்களை குற்றவாளிகள் போன்று நடத்துவதும், கைது செய்வதும் தீர்வாக அமையாது என்ற எனது கருத்தை தாங்கள் ஒப்புக் கொள்வீர்கள்.
இந்திய மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன்பிடிக்கும்போது அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், கைது செய்வதும் சமீப காலங்களில் தொடர்கதையாகி வருவது கவலை அளிப்பதாக உள்ளது. கச்சத்தீவு பகுதியில் தன்னிச்சையாக சர்வதேச எல்லைக் கோட்டை இலங்கை அரசு வகுத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்படும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால், தாங்கள் மௌனம் சாதிப்பது தமிழக மீனவர்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என இலங்கை அரசு நினைத்து விடக் கூடாது.
தமிழக மீனவர்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். மேலும், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லாமல் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அந்த நாட்டு அரசை தாங்கள் அறிவுறுத்த வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications