"அவாள்" கையில் பத்திரிகை.. 22-ந் தேதி வரை பொறுமையா இருங்க...: ப.சிதம்பரம்
சென்னை: இனப்படுகொலை நிகழ்த்திய இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா? ஆதரிக்காதா? என்ற கேள்விகள் ஒருபக்கம்.. இலங்கை நட்பு நாடு என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் விளக்கம் இன்னொரு பக்கம்.. உச்ச கட்டமாக தமிழக மாணவர்கள் போராட்டம்.. இந்நிலையில் 22-ந் தேதி நல்ல செய்தி வரும் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ப.சிதம்பரத்தின் 'சைலன்ட்' ரோல் 'லாபி' ரோல் எப்போதுமே உண்டு. இலங்கை இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் சுப. வீரபாண்டியன், கனிமொழி வழியே ப.சிதம்பரத்தின் மூலமாக மத்திய அரசுடன் பேச்சு நடத்தியதாகவும் சொல்லப்படுவது உண்டு.
தற்போது மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தின் குக்கிராமங்கள் கூட கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், காரைக்குடியில் பட்ஜெட் விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.

கருப்புக் கொடி போராட்டம்
மத்திய அரசு மீதான கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் ப.சிதம்பரம் காரைக்குடி கூட்டத்துக்கு செல்லும் வழியில் தமிழ் அமைப்பினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

சுதந்திரமான விசாரணை
பின்னர் பொதுக் கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் சுதந்திரமான நம்பகத்தன்மை மிகுந்த ஒரு விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த தீர்மானத்திலே வாசகம் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அதுபோன்ற ஒரு வாசகம் அந்த தீர்மானத்திலே இருந்தால், அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுக்க வேண்டும்.

22ம் தேதி வரை பொறுமை காக்க வேண்டும்
இந்தியா அந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். இந்தியா அந்த தீர்மானத்தை வலியுறுத்த வேண்டும். இந்தியா அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்பது நம்முடைய குரல். நம்முடைய வேண்டுகோள். 22ம் தேதி வரை நீங்கள் பொறுமை காக்க வேண்டும்.

நம்பிக்கை ஊட்டுங்கள்
22ம் தேதி நல்ல செய்தி நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனக்கு இருக்கும் நம்பிக்கையை உங்களுக்கு நான் ஊட்டுகிறேன். உங்களுக்கும் அந்த நம்பிக்கை வர வேண்டும். உங்களுக்கு உள்ள நம்பிக்கையை உங்களுடைய அடுத்த வீட்டுக்காரருக்கு ஊட்ட வேண்டும். அவருக்கு அந்த நம்பிக்கை வர வேண்டும். எல்லாரும் மாணவர்கள் மத்தியிலே இன்று தொடங்கி 22ம் தேதி வரை ஊட்டுங்கள் என்றார்.

'அவாள்' கையில் பத்திரிகை
மத்திய அரசு எவ்வளவோ பல நல்ல திட்டங்களை எல்லாம் அறிவித்து செயல் படுத்துகிறது. சட்டங்களாக இருந்ததையெல்லாம் திட்டங்களாக்கியது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான். அதில் குறிப்பாக கல்வி உரிமை, வேலைவாய்ப்பு,தகவல் அறியும் உரிமை உணவுக்கு உறுதி என்று பல நல்ல திட்டங்களைஎல்லாம் அமல் படுத்தி உள்ளோம். ஆனால் 2004 தேர்தலில் மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிதான் அமையும் என்று ஒரு சில பத்திரிக்கைகளை தவிர மற்ற அனைத்தும் எழுதின.அதற்கு காரணம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரிடம் மட்டுமே நாளிதழ்கள் இருப்பதால்தான்.

ஆனால் நடந்தது என்ன?
ஆனால் நடந்தது என்ன? மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிதான் அமைந்த்தது. அதே போல நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்சித் அவர்கள் இலங்கை விவகாரம் குறித்து பேசியதை அதே நாளிதழ்கள் உள் பக்கத்தில் வெளியிட்டு மறைக்க பார்க்கிறது. அதற்க்கு காரணம் நாளிதழ்கள் எல்லாம் அவாள் கையில் உள்ளது.

காங்கிரஸ் விருப்பம்
எப்படி கடந்த ஆண்டு ஐ.நா. மன்றத்தில் இலங்கையை எதிர்த்து இந்தியா வாக்களித்ததோ அதைப்போல இந்த முறையும் இந்தியா வாக்களிக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு சம உரிமை சம வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் விருப்பம் என்றார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications