உணர்வை வெளிப்படுத்திய பெண்கள்... ராஜபக்சேவுக்கு எதிராக கருப்பு பேட்ஜுடன் மீன் வியாபாரம்
கடலூர்: கடலூரைச் சேர்ந்த பெண் மீன் வியாபாரிகள், இலங்கை சர்வாதிகாரி ராஜபக்சேவுக்குக் கண்டனம் தெரிவித்து கருப்பு பேட்ஜை தங்களது ஜாக்கெட்டில் அணிந்து கொண்டு வியாபாரம் செய்தது அனைவரையும் நெகிழ வைத்தது.
ராஜபக்சேவுக்கு எதிராகவும், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
மாணவர்கள்தான் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து வீராவேசத்துடன் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடலூரில் பெண் மீன் வியாபாரிகளும் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது உணர்வை வெளிப்படுத்தினர்.
கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டு கொல்வதை கண்டித்தும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவித்து தண்டனை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மீன் மார்க்கெட்டில் மீன் விற்கும் பெண்கள் இன்று கறுப்பு பேட்ஜ் அணிந்து மீன்விற்றனர்.
சுமார் 500-க்கும் மேற்பட்ட மீன் விற்கும் பெண்கள் இலங்கை அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கறுப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர். இதை அனைவரும் பார்த்து நெகிழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications